சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வேட்டங்குடி சரணாலயத்தில் அதீத சப்தம் காரணமாக பறவைகளுக்கும், குஞ்சுகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் கிராம மக்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கவில்லை.
திருப்பத்தூா் அருகே வேட்டங்குடி சரணாலயத்தில் கொள்ளுகுடிப்பட்டி கண்மாயில் 38.4 ஏக்கரில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் செப்டம்பா் மாத இறுதி, அக்டோபா் மாதங்களில் பல ஆயிரக்கணக்கான வெளிநாடு மற்றும் வெளி மாநில பறவைகள் இனப்பெருக்கத்துக்காக வருவதுவழக்கம். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் அப்பறவைகள் குஞ்சுகளுடன் இருப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்லும்.
நடப்பாண்டு ஜூன் மாதம் முதல்மழை பெய்ததால் சீசனுக்கு முன்பேஜூலை மாதத்தில் இருந்தே இலங்கை, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்டநாடுகளைச் சேர்ந்த உண்ணி கொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, பாம்புதாரா, கருநீலம், வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், நத்தை கொத்திநாரை, வக்கா போன்ற வெளிநாடு மற்றும் வெளிமாநில பறவைகள் இனப்பெருக்கத்துக்காக குவிந்துள்ளன.
இதுகுறித்து கொள்ளுகுடிபட்டியைச் சேர்ந்த ஆறுமுகம், மகேஸ்வரி ஆகியோர் கூறியதாவது:
இந்த ஆண்டு எங்கள் பகுதியில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் ஜூலை மாத தொடக்கத்திலேயே பறவைகள் வரத் தொடங்கின. 15 ஆண்டுகளுக்குப் பிறகு கண்மாய்நிரம்பி உள்ளது. எனவே கடந்தஆண்டுகளைவிட பறவைகளின்எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
அதீத சப்தம் பறவைகளுக்கும், அதன் குஞ்சுகளுக்கும் பாதிப்பைஏற்படுத்தும் என்பதால் 1972-ம்ஆண்டுமுதல் தீபாவளி, சுப நிகழ்ச்சிகள், துக்கநிகழ்ச்சிகளில் நாங்கள் பட்டாசு வெடிப்பதில்லை. அதன்படிஇந்தாண்டும் நாங்கள் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.