தீபாவளி தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் வசிக்கும் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதனால், எப்போதும் வாகனங்கள் நிறைந்து பரபரபரப்பாக காணப்படும் சென்னை பாடி மேம்பாலப் பகுதி, வாகனப் போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. படம்: ம.பிரபு 
தமிழகம்

பண்டிகை முடித்து பொதுமக்கள் ஊர் திரும்ப வசதியாக நவ.8 வரை தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு: போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்

செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகையை முடித்து, மக்கள் ஊர் திரும்ப வசதியாக சென்னை உட்பட பல்வேறு இடங்களுக்கும் 8-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சென்னை உட்பட பல்வேறு இடங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். குறிப்பாக, சென்னையில் இருந்து அரசு பேருந்துகள், ரயில்களில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்றனர்.

இதற்கிடையே, தீபாவளி பண்டிகை முடிந்துள்ளதால், நேற்றுமுதல் மக்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து திரும்பத் தொடங்கி விட்டனர். இதையொட்டி, நேற்று முதல் பல்வேறு இடங்களுக்கும் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுபற்றி தமிழகபோக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

சொந்த ஊரில் தீபாவளி பண்டிகையை முடித்துவிட்டு, மக்கள் நேற்று மதியம் முதல் திரும்பத் தொடங்கியுள்ளனர். சென்னை உட்பட பல்வேறு இடங்களுக்கும் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகளை இயக்குகிறோம். குறிப்பாக, பல்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,319 சிறப்பு பேருந்துகளை 8-ம் தேதி வரை இயக்க உள்ளோம். இதேபோல, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை உட்பட பல்வேறு ஊர்களுக்கு 5 ஆயிரம் பேருந்துகளை இயக்க உள்ளோம்.

அதன்படி 8-ம் தேதி வரை மொத்தம் 17,719 பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளோம். நாளைமற்றும் நாளை மறுநாள் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். கூட்டத்துக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மக்கள் அதிக அளவில் அரசுபேருந்துகளில் பயணம் செய்ததால், கடந்த 4 நாட்களில் போக்குவரத்து கழகங்களுக்கு ரூ.86 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT