தமிழகம்

தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையின்போது அனுமதியை மீறி பட்டாசு வெடித்ததாக 2,000 வழக்குகள் பதிவு: 11 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தகவல்

செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகையின்போது அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் சுமார் 2,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 11 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

தீபாவளி பண்டிகை கடந்த 4-ம்தேதி கொண்டாடப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியும், தமிழக அரசின் வழிகாட்டுதல்படியும் தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

பசுமை பட்டாசுகளை மட்டுமேவெடிக்க வேண்டும். அதிக ஒலிஎழுப்பும் சரவெடிகள் வெடிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகளும் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், தடையை மீறி பட்டாசு வெடித்ததாக தமிழகம் முழுவதும் சுமார் 2,000 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சென்னையில் தீபாவளியன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தது தொடர்பாக 796 வழக்குகள் உட்பட மொத்தம் 891 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

விதிகளை மீறி பட்டாசு கடைகள் நடத்தியது தொடர்பாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

11 இடங்களில் தீ விபத்து

தீபாவளி பண்டிகையின்போது தமிழகத்தில் 11 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தீயணைப்பு, மீட்புத் துறை இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் கூறியதாவது:

சென்னையில் 42 தீயணைப்பு நிலையங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 346 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. தீபாவளியை முன்னிட்டு அனைத்து இடங்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சென்னையில் கூடுதலாக 24 இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன.

அசம்பாவிதங்களை தடுக்க கடந்த 3-ம் தேதி காலை முதல் தமிழகத்தில் அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் தீயணைப்பு வீரர்கள், வாகனங்களில் தயார் நிலையில் இருந்தனர். வீரர்கள் தங்களது தீயணைப்பு நிலையங்களிலேயே தீபாவளி கொண்டாடினர். பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பதுகுறித்து மக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பெரும்பாலான இடங்களில் மக்களும்ஆபத்து இல்லாமலேயே பட்டாசுகள் வெடித்தனர்.

சென்னையில் 3 இடங்கள் உட்பட தமிழகத்தில் 11 இடங்களில் பட்டாசு வெடிக்கும்போது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தீயை அணைத்து பெரும் சேதத்தை தவிர்த்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை, புறநகர் பகுதிகளில் பட்டாசு வெடித்ததில் 16 சிறுவர்கள் உட்பட 51 பேர் காயம் அடைந்தனர்.

பருவமழை முன்னேற்பாடுகள்

பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து தமிழ்நாடு தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை இயக்குநர் கரன்சின்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தீயணைப்பு, மீட்பு பணிகள் துறையின் அனைத்து நிலையங்களும், தேவையான உபகரணங்களுடன் 24 மணி நேரமும் செயல்படத் தயாராக உள்ளது. ரப்பர் படகுகள், மோட்டார் படகுகள், ஃலைப் ஜாக்கெட் உள்ளிட்ட அனைத்து கருவிகளும் தயாராக உள்ளன. திறன்மிக்க தீயணைப்பு நீச்சல் வீரர்களைக் கொண்ட குழு, கயிறு மூலம் மீட்புப் பணி மேற்கொள்ள பயிற்சி பெற்ற குழு என2 கமாண்டோ படைகள் தயாராக உள்ளன.

வெள்ளக் காலங்களில் பிற அரசுதுறையினருடன் ஒருங்கிணைந்து மீட்பு பணியை மேற்கொள்ள தீயணைப்புத் துறையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் 8,462 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு, மீட்பு பணி தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளனர்.

SCROLL FOR NEXT