மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வில், கோவை மாவட்டத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்த மாணவன், மாணவி வெற்றி பெற்றுள்ளனர்.
கோவை திருமலையாம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட நஞ்சப்பனூர் பழங்குடியினர் கிராமத்தை சேர்ந்த மாணவி சங்கவி. இவர், அண்மையில் நடந்த நீட் தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 202 மதிப்பெண் பெற்று மருத்துவப்படிப்பு பயில தகுதி பெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேற்று மாணவியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு, மடிக்கணினியை பரிசாக அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது, “ஒரு பெண் கல்வி அறிவு பெற்றால் ஒரு சமூகமே முன்னேற்றம் அடையும் என்ற தந்தை பெரியாரின் கூற்றுப்படி, இந்த பழங்குடி மாணவி படித்து டாக்டராக வேண்டும் என முயற்சி செய்து வெற்றி பெற்று, தான் சார்ந்த பகுதிக்கு பெருமை தேடித்தந்துள்ளார். அவரை ஊக்கப்படுத்தவும், பிற பழங்குடியின மாணவர்களுக்கு இவர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன்” என்றார்.
இதேபோல, ஆத்துப் பொள்ளாச்சி அருகே பழங்குடியின இந்து முடுகர் வகுப்பைச் சேர்ந்த மாணவரான ராதாகிருஷ்ணன் (19), நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதுகுறித்து, அவர் கூறும்போது, “கடந்த 2019-20-ம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 முடித்தேன். அரசு விடுதியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு, விடுதி கட்டிடம் பழுது உள்ளிட்ட காரணங்களால் விடுதிகள் மூடப்பட்டதால் பள்ளிக் கல்வியை முடிப்பதற்குள் 7 பள்ளிகள், 8 தங்கும் விடுதிகள் மாறி விட்டேன். மருத்துவராக வேண்டும் என்பது என் கனவு. அதனால் ‘நீட்’ தேர்வு எழுதினேன். அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்றேன். கடந்த 2020-ம் ஆண்டில் முதல் முறை எழுதிய நுழைவுத் தேர்வில் 169 மதிப்பெண்கள் பெற்றேன்.
பின்னர், தன்னார்வ அமைப்புகளின் உதவியோடு தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து, தற்போது 406 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளேன். என் மருத்துவ கனவு கைகூடும் என்று நம்புகிறேன். நீட் தேர்வு கண்டு மாணவர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. முனைப்புடன் படித்தால் வெற்றி மிகவும் எளிமையானது” என்றார்.
மாணவன் ராதாகிருஷ்ணனின் தாய் மகாலட்சுமி கூறும்போது, ‘‘கணவனை பிரிந்து தவித்த எனக்கு ஆதரவு கரம் நீட்ட யாரும் இல்லாத நிலையில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் தினக்கூலிக்கு சென்று, என் மகன்களை படிக்க வைத்து வருகிறேன். குடும்பத்தின் ஏழ்மை நிலை காரணமாக ராதாகிருஷ்ணன் 7 வயதில் இருந்தே விடுதியில் தங்கி கல்வி பயின்றதால் தாயின் அன்பு கூட அவனுக்கு கிடைக்கவில்லை. பழங்குடியினத்தில் பிறந்த என் மகன் மருத்துவரானால் எனக்கு பெருமிதம்” என்றார்.