தமிழகம்

தாம்பரம் மாநகராட்சிக்கான அவசர சட்டம் பிறப்பிப்பு: 5 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் இணைப்பு

செய்திப்பிரிவு

தாம்பரம் மாநகராட்சி உருவாக்குவதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், விரைவில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட உள்ளார். மேலும், 5 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள் முதல் கட்டமாக இணைக்கப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் நகராட்சி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் முடிவில் துறையின் அமைச்சர் கே.என்.நேரு, தாம்பரம் மாநகராட்சி உருவாக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து தாம்பரம்மாநகராட்சியுடன் இணைக்கப்படும் பகுதிகள் குறித்தும், மாநகராட்சி உருவாக்கம் குறித்தும் அரசாணை வெளியிடப்பட்டது. இந்நிலையில், தற்போது தாம்பரம் மாநகராட்சிக்கான சட்டத்தை உருவாக்கி, சட்டப்பேரவை கூட்டம் இல்லாத நிலையில், ஆளுநர் ஒப்புதலை பெற்று அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த அவசர சட்டம் தமிழகஅரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், தாம்பரம் மாநகராட்சி உருவாக்கம் உடனடியாக அமலுக்கு வருகிறது. மேலும், தாம்பரம் மாநகராட்சி சட்டம், கோவை மாநகராட்சி சட்டத்தை பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாநகராட்சி மேயர், கவுன்சில், நிலைக்குழு, வார்டு குழு மற்றும் கமிஷனர் நியமனத்துக்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. கவுன்சிலில் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான ஒதுக்கீடுகளை பின்பற்ற அறிவறுத்தப்பட்டுள்ளது. தற்போது கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்படாத நிலையில், தாம்பரம் மாநகராட்சிக்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்படுவார். தாம்பரம் நகராட்சியில் பணியாற்றியஅலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்களாக மாற்றப்படுவார்கள்.

தாம்பரம் மாநகராட்சியில் தற்போதைய சூழலில் தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம் ஆகிய 5 நகராட்சிகள் மற்றும் சிட்ல பாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, திருநீர்மலை பேரூராட்சிகள் இணைக்கப் படுகின்றன.

இவ்வாறு அரசிதழில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT