தமிழகம்

கோட்டக்குப்பத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது கோர விபத்து - நாட்டுவெடி வெடித்து தந்தை, மகன் உயிரிழப்பு

செய்திப்பிரிவு

தமிழகம் - புதுச்சேரி எல்லையில் நாட்டு வெடிகள் வெடித்து ஸ்கூட்டரில் சென்ற தந்தை, மகன் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி, அரியாங்குப்பம், காக்கயான் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கலைநேசன் என்ற கலையரசன் (37). இவர், புதுச்சேரியை அடுத்துள்ள தமிழகப் பகுதியான கோட்டக்குப்பம் அருகே கூனிமேட்டில் உள்ள தனது மனைவி ரூபினாவை பார்த்து விட்டு, நாட்டு வெடிகள் அடங்கிய சிறு மூட்டையை தனது ஸ்கூட்டரில் ஏற்றிக்கொண்டு, 7 வயது மகன் பிரதீஷுடன் நேற்று முன்தினம் பிற்பகல் சின்ன கோட்டக்குப்பம் நோக்கிச் சென்றார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சகாபுதின் என்ற சையது அகமது (60) என்பவர் தன் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடந்த போது, இரு வாகனங்களும் மோதிக்கொண்டன. அப்போது ஏற்பட்ட தீப்பொறியில் நாட்டு வெடிகள் வெடித்தன. இதில் கலையரசன் பிரதீஷ் இருவரும் 100 மீட்டர் தொலைவிற்கு தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உடல்கள் சிதறி உயிரிழந்தனர். அவர்கள் ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும் தீப்பற்றி, தூக்கி எறியப்பட்டது. இதில் சையது அகமது, மேலும் அந்த வழியாகச் சென்ற புதுச்சேரி, கருவடிக்குப்பத்தைச் சேர்ந்த கணேஷ் (45), கோட்டக்குப்பத்தைச் சேர்ந்த சையத் அகமது (60), சாமிப்பிள்ளை தோட்டத்தைச் சேர்ந்த விஜி ஆனந்த் (36) ஆகியோர் படுகாயமடைந்தனர். 3 பேரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகவல் அறிந்த விழுப்புரம் சரக டிஐஜி.பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதாஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். புதுச்சேரி போலீஸாரும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். விபத்து தொடர்பாக வருவாய்துறை சார்பில் வானூர் வட்டாட்சியர் உமா மகேஸ்வரன் தனது விசாரணை அறிக்கையை அரசுக்கு அனுப்பியுள்ளார். சம்பவம் தொடர்பாக கோட்டக்குப்பம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுச்சேரி, அரியாங்குப்பத்தில் சில இடஙகளில் அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் நாட்டு வெடிகள் உருவாக்கப்பட்டு விற்கப்பட்டு வருகின்றன. உயிரிழந்த கலையரசன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாலும், அந்த நாட்டு வெடிகளை வாங்கி மரக்காணம் பகுதியில் விற்பனை செய்து வந்துள்ளார். அப்படி விற்பனை செய்தது போக மீதமிருந்த நாட்டு வெடிகளை கொண்டு செல்லும் போது இந்த கோர விபத்து நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT