குமரியில் பெய்த தொடர் கனமழையால் 21 ஆண்டுகளில் முதல் முறையாக பொய்கை அணை நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீபத்தில் தொடர்ச்சியாகப் பெய்த கனமழையே 32 ஆண்டுகளில் பெய்த அதிகபட்ச மழை என்று பொதுப்பணித்துறை நீர் ஆதாரப் பிரிவினர் கணக்கீட்டில் தெரியவந்துள்ளது. குறிப்பாகக் கோதையாற்றில் ஒரே நாளில் 30 செ.மீ.க்கு மேல் மழை பெய்திருந்தது. கடந்த இரு நாட்களாக மழை நின்று விட்டு விட்டு சாரல் மட்டும் அடித்து வருகிறது.
அதே நேரம் குமரி மாவட்டத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, மறுகால் பாய்ந்து வருகின்றன. 2000க்கும் மேற்பட்ட பாசனக் குளங்களும் நிரம்பியுள்ளன. குமரி மாவட்டத்தின் நீர் ஆதாரமான பேச்சிப்பாறை அணையில் 44 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 1,201 கன அடி தண்ணீர் உள்வரத்தாக வரும் நிலையில் அணையில் இருந்து விநாடிக்கு 1,085 கன அடி தண்ணீர் உபரியாகத் திறந்து விடப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 73.29 அடியாக உள்ளது. அணைக்கு 1127 கன அடி தண்ணீர் வரும் நிலையில், அணையில் இருந்து 800 கன அடி தண்ணீர் உபரியாக வெளியேறி வருகிறது.
நாகர்கோவில் நகருக்குக் குடிநீர் வழங்கும் முக்கடல் அணை முழுக் கொள்ளளவான 25 அடி நீர்மட்டம் நிரம்பி மறுகால் பாய்கிறது. மாம்பழத் துறையாறு அணை நீர்மட்டம் 53.81 அடியாக உள்ளது. இதைப்போல் சிற்றாறு 1, 2 அணைகளும் நிரம்பியுள்ளன. இந்நிலையில் ஆரல்வாய்மொழி பகுதியை ஒட்டிய மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கை அணை கடந்த 2000-ம் ஆண்டில் கட்டப்பட்டது. இதுவரை முழுக் கொள்ளளவை எட்டாமல் இருந்து வந்தது. கனமழை பெய்தாலும் 25 அடிக்குள் மட்டுமே நீர்மட்டம் உயர்வது வழக்கமாக இருந்தது.
இதற்குப் பொய்கை அணைக்கு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து தண்ணீர் வரும் சுங்கான் ஓடை முறையாகச் சீரமைக்கப்படாமல் இருந்தது காரணமாக இருந்தது. கட்டுமானப் பொருட்களைக் கழுதைகளின் மேல் ஏற்றிக்கொண்டு செல்ல வேண்டும் என்பதால், இதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனால் பொய்கை அணையை நம்பியுள்ள ஆரல்வாய்மொழி, தோவாளை, மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கவலை அடைந்து வந்தனர். இந்நிலையில் தற்போது கனமழையால் அணைக்கு அதிக தண்ணீர் வந்து, அணை நிரம்பியுள்ளது. பொய்கை அணையின் நீர்மட்டம் தற்போது 42.70 அடியாக உள்ளது. இதனால் மறுகால் பாய்ந்து வருகிறது. பொய்கை அணை 21 ஆண்டுகளில் முதல் முறையாக முழுக் கொள்ளளவைத் தாண்டி மறுகால் பாய்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.