தீபாவளியைக் கொண்டாடப் பாட்டிக்கு வீட்டுக்கு வந்த இரு குழந்தைகள் குளத்தில் மூழ்கி உயிரிழந்தது அரியலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர், மறுக்காலங்குறிச்சி கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடத் தனது மகள் ஹரிணி (7) மற்றும் தம்பி மகன் லோகேஷ் (6) ஆகிய இருவரையும் கடந்த 3-ம் தேதி விட்டுவிட்டு வந்துள்ளார். இந்நிலையில் 2 குழந்தைகளும் மறுக்காலங்குறிச்சி கிராமத்தில் உள்ள சில சிறுவர்களுடன் சேர்ந்து பாட்டி வீட்டிற்கு அருகிலுள்ள குளத்துக்கு அருகே நேற்று மாலை (நவ.4) விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது லோகேஷ் குளத்தில் தவறி விழுந்துள்ளார். உடன் அருகிலிருந்த ஹரிணி, லோகேஷைக் காப்பாற்ற எண்ணிக் குளத்தில் இறங்கியுள்ளார். வெகுநேரமாகியும் இருவரும் கரை திரும்பாததால் அருகில் இருந்த சிறுவர்கள் கூச்சலிட்டுள்ளனர். கூச்சல் சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ள மக்கள் 2 குழந்தைகளையும் குளத்தில் இறங்கித் தேடினர். இரவு 7 மணி அளவில் 2 குழந்தைகளையும் சடலமாக மீட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸார், குழந்தைகளின் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.