புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை குறைவு உடனே அமலாகும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நாடு முழுவதும் மக்கள் பயன்பெறும் வகையிலும், பெருளாதார நடவடிக்கைகளை விரைவுபடுத்தும் நோக்கத்தோடும் பெட்ரோல். டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு ரூ. 5.26 காசுகள் குறைத்தது.
இதைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி விகிதத்தை சுமார் ரூ. 7 அளவிற்கு குறைப்பதற்கான புதுச்சேரி அரசின் முடிவிற்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் பெட்ரோல், டீசல் விலை குறையும்.இந்த விலை குறைப்பு 4-11-2021 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ரங்கசாமி அறிவிப்பில், இந்த வரிகுறைப்பானது அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தீபாவளி பரிசாக அமையும். இதனால், கரோனா நோய்த்தொற்றால் முடங்கிக்கிடக்கும் வணிகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி மீண்டும் புத்துயிர் பெறும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் இன்று பெட்ரோல் விலை ரூ.12.85 குறைந்து ரூ.94.94 க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போன்று டீசல் விலை ரூ.19 குறைந்து ரூ.83.58 க்கு விற்பனை செய்யப்படுகிறது.