சென்னை எழும்பூர் மாநில காவல் கட்டுப்பாட்டறைக்கு வழங்கப்பட்டுள்ள ஐஎஸ்ஓ சர்வதேச தரச்சான்றிதழை தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அவசர கால உதவி எண்கள்
சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறையில், அவசர கால உதவி எண்கள் 100, 112, 101 அழைப்புகள் கையாளப்படுகின்றன. இது நவீனஒருங்கிணைந்த தரவு தளம் மற்றும்இதர தொழில்நுட்ப கட்டமைப்புகளுடன் நிறுவப்பட்டுள்ளது. இந்த நவீன ஒருங்கிணைந்த தரவு தளத்தில் இதுநாள் வரை ரூ.1.12 கோடி அவசர கால அழைப்பு விவரங்கள் மற்றும் 14.5 லட்சம் ‘காவலன்’ செயலி பயன்படுத்துவோரின் தகவல்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த நவீன ஒருங்கிணைந்த தரவு தளத்தின் தகவல்கள் பாதுகாப்பு அமைப்புக்கு ‘பிரிட்டீஷ்ஸ்டாண்டர்ட்ஸ் இன்ஸ்டிடியூஷனால்‘ ஐஎஸ்ஓ 27001:2013 சர்வதேச தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.நாட்டிலேயே முதல் முறையாக தமிழக வனத் துறையின் மாநில காவல் கட்டுப்பாட்டறையின் செயல்பாட்டுக்கு இந்த தரச்சான்றுபெறப்படுகிறது என்பது குறிப் பிடத்தக்கது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், சென்னை எழும்பூரில் உள்ள மாநில கட்டுப்பாட்டறைக்கு வழங்கப்பட்ட ஐஎஸ்ஓ சர்வதேச தரச்சான்றை காவல்துறை தலைமை இயக்குநர் செ.சைலேந்திர பாபுவிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், காவல்துறை கூடுதல் டிஜிபிக்கள் அமரேஷ் புஜாரி (சைபர் கிரைம்), வினித் தேவ் வான்கடே (தொழில்நுட்ப சேவை). டிஐஜி எஸ்.மல்லிகா (தொழில்நுட்ப சேவை) உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.