சென்னையில் பாதுகாப்பற்ற முறையில், விழும் நிலையில் இருந்த 19 ஆயிரத்து 25 மரங்களின் கிளைகளை அகற்றி இருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் மரம் வேரோடு சாய்ந்ததில் போக்குவரத்து பெண் காவலர் சிக்கி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து பாதுகாப்பற்ற முறையில் உள்ள மரக்கிளைகளை அகற்றும் நடவடிக்கையை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் 1 லட்சத்து 75 ஆயிரத்து 309 மரங்கள் உள்ளன. மாநகராட்சி சார்பில் பருவமழை காலத்துக்கு முன்னதாகவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் மற்றும் பாதுகாப்பற்ற முறையில் விழும் நிலையில் உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக, மாநகராட்சியில் 6 நவீன ஹைட்ராலிக் இயந்திரங்கள், 2 மரம் அறுக்கும் இயந்திரம் பொருத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் 371 கையினால் இயக்கும் மர அறுவை இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 3 மாதங்களில் சுமார் 19 ஆயிரத்து 25 மரக்கிளைகளை அகற்றி, அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், பாதுகாப்பற்ற முறையில் விழும் நிலையில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றுவது குறித்து 1913 என்ற உதவி எண்ணுக்கும், 044-2561 9206, 2561 9207 மற்றும் 2561 9208 ஆகிய கட்டுப்பாட்டு அறை எண்களுக்கும் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.