நம் முன்னோர்கள் வழி வகுத்துக் கொடுத்த தீபாவளி பண்டிகையை அனைவரும் கொண்டாடி வருகிறோம். பண்டிகை என்பது அமைதிக்கும் நிம்மதிக்கும் ஒற்றுமைக்கும் வழி வகுக்கும். இருப்பவர் இல்லாதோருக்கு கொடுத்து பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.
எந்த ஒரு காரியத்தையும் உடனே செய்ய வேண்டும். நல்லதை உடனே செய்ய வேண்டும். தர்மத்தை உடனே செய்ய வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். மனிதர்களிடம் எத்துணை வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமையாக செயல்பட்டால்தான் அது செம்மையாக இருக்கும்.
இயற்கையை ஒன்றி அனைத்தும் செயல்படும்போது அவை செம்மையாக இருக்கின்றன. தெய்வ நம்பிக்கை என்பது எத்தனை தேங்காய் உடைத்தோம் என்பதில் இல்லை. கடவுளை வெறும் கையெடுத்து கும்பிட்டால் கூட நல்ல உள்ளத்துடனும் எண்ணத்துடனும் வேண்டிக் கொள்வதுதான் உண்மையான தெய்வ நம்பிக்கை. இப்போது இருக்கும் மரங்களை காப்பாற்ற வேண்டும்; அழிக்கக் கூடாது.
மிருகங்கள் காட்டில் வாழும்போது அமைதியுடனும், நிம்மதியுடனும் வாழ்கின்றன. மனிதன்தான் மண்ணுக்கும், பொன்னுக்கும், பெண்ணுக்கும் ஆசைப்படுகிறான். போதைக்கு அடிமையாகி அமைதியை இழக்கிறான். காட்டில் உள்ள விலங்குகளையும் அதன் வாழ்விடம் சென்று ஆக்கிரமித்து தொந்தரவு செய்கிறான். அதன் விளைவாக மனிதனின் வாழ்விடத்துக்கு விலங்குகள் வருகின்றன. உழைத்து வாழ வேண்டும். உழைப்புக்கு மரியாதை உண்டு; உயர்வு உண்டு. படித்தால் மட்டும் போதாது படியளக்க வேண்டும். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். இவ்வாறு பங்காரு அடிகளார் அருளாசி வழங்கியுள்ளார்.