தமிழகம்

தமிழகத்தில் மரம் நடுதலில் இந்திய மருத்துவ சங்கம் உலக சாதனை

செய்திப்பிரிவு

தமிழகத்தில் அதிக மரங்களை நடுதல், தோட்டங்களை அமைத்ததில், இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக கிளை உலக சாதனை படைத்துள்ளது.

இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழகக் கிளை, ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மூலம் ‘பசுமை பயணம்’ இயக்கத்தை நடத்தி தமிழகம் முழுவதும் 1.70 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளது. 15 ஆயிரத்துக்கும் அதிகமான தோட்டங்கள் மற்றும் மாடி தோட்டங்களை அமைத்து உலக வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அதிக அளவில் மரங்களை நட்டது, தோட்டங்கள் மற்றும் மாடித் தோட்டங்களை அமைத்ததில் உலகின் முதல் மருத்துவ சங்கம் எனும் உலக சாதனையை 2012-ம் ஆண்டில் படைத்துள்ளது. இந்த சாதனை ‘யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக் ஆஃப் ரிக்கார்ட்ஸ்’ மற்றும் ‘ஃப்யூச்சர் கலாம் புக் ஆஃப் ரிக்கார்ட்ஸ்’ ஆகியவற்றில் இடம்பெற்றுள்ளன.

இதுதொடர்பாக சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமாவளவன் கூறும்போது, “மாநிலத் தலைவர் ராமகிருஷ்ணன்,ரவிக்குமார், மருத்துவர் தியாகராஜன் ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த வரலாற்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.

புவி வெப்பமாவதைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கவும், மழை, மண், நீர் வளம் காக்கவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும் மருத்துவர்களின் இந்த பங்களிப்பு தொடரும்” என்றார்.

SCROLL FOR NEXT