தமிழகம்

பஞ்சமி நிலங்களை மீட்க சட்டம் இயற்றப்படும் என முதல்வர் உறுதி: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் பஞ்சமி நிலங்களை மீட்க விரைவில் சட்டம் இயற்றப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்திருப்பதாக தேசியதாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹால்டர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காகத் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் அருண் ஹால்டர் தனது குழுவுடன் தமிழகத்துக்கு வந்துள்ளார்.

அதன்படி, கடந்த 3 நாட்களாகக் காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அருண்ஹால்டர் தனது குழுவுடன் ஆய்வுசெய்தார். இந்நிலையில், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, காவல் துறை டிஜிபிசெ.சைலேந்திரபாபு ஆகியோருடன் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று காலை ஆலோசனை செய்தார்.

இதுதொடர்பாக, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களிடம் அருண் ஹால்டர் கூறியதாவது:

தமிழகத்தில் காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் கடந்த 3 நாட்களாக ஆய்வு செய்துள்ளேன். இதைத் தொடர்ந்து, தலைமைச் செயலாளர், காவல் துறைத் தலைவருடன் ஆலோசனை மேற்கொண்டேன். அதேபோல, தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர். என்.ரவி ஆகியோரை சந்தித்துத் தாழ்த்தப்பட்ட மக்கள் நலன் சார்பாக பேசினேன்.

அப்போது, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்கநடவடிக்கை எடுக்குமாறு முதல்வரிடம் வலியுறுத்தினேன். பஞ்சமிநிலத்தை மீட்பதற்கான சட்டம் விரைவில் கொண்டு வரப்பட்டு, அந்தநிலங்கள் அனைத்தும் மீட்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார். தமிழகத்தில் சுமார் 2 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. அதில் சுமார் 40,000 ஏக்கர்பஞ்சமி நிலத்தைத் தாழ்த்தப்பட்டோர் அல்லாதவர்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் சட்ட விரோதமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் வன்கொடுமையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.8.25 லட்சம் இழப்பீடு, அரசு வேலை, 3 ஏக்கர் விவசாய நிலம் போன்றவை வழங்கப்பட வேண்டும் எனவும், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டு, நிரப்பப்படாமல் உள்ள 3,000 அரசுப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT