தேர்தல் முறைகேடுகளை தடுக்கும் வகையில் உழைக்க வேண்டும் என்று தேமுதிக வழக்கறிஞர்களுக்கு விஜயகாந்த் அறிவுரை வழங்கினார்.
தேமுதிக மாநில வழக்கறிஞர்கள் அணி ஆலோசனைக் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமை வகித்தார்.
அந்தக் கூட்டத்தின் போது, “தேர்தலையொட்டி வாக்காளர் களுக்கு பணம் அளிப்பவர்கள், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்படுபவர்கள், முறை கேடுகளை அரங்கேற்றுபவர்கள் ஆகியோரை வழக்கறிஞர் அணியினர் கண்காணித்து தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும். முறைகேடுகளைத் தடுக்கவும், அது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று விஜயகாந்த் அறிவுரை வழங்கினார்.
மேலும், “தேர்தல் நேரத்தில் தேமுதிகவுக்கு வருகிற சட்டரீதியான பிரச்சினைகளை தீர்த்து வைப்பதும் வழக்கறிஞரணியின் பணியாக இருக்க வேண்டும்” என்று விஜயகாந்த் வலியுறுத்தி யுள்ளார்.