திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களிலும் நேற்றும் பலத்த மழை நீடித்தது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 1 வாரத்துக்கு மேலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை நேற்றும் நீடித்தது. காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும், பிற இடங்களிலும் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):
பாபநாசம்- 10, சேர்வலாறு- 27, மணிமுத்தாறு- 25.2, அம்பா சமுத்திரம்- 15, சேரன்மகாதேவி- 20, நாங்குநேரி- 3, களக்காடு- 2.2, மூலக்கரைப்பட்டி- 5, பாளையங் கோட்டை- 55, திருநெல்வேலி- 32.20.
பாபநாசம் அணை நீர்மட்டம் 135.60 அடியாக இருந்தது. அணைக்கு 1,842 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 1,034.75 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 82.60 அடியாக இருந்தது. அணைக்கு 547 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 20 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. பலத்த மழையாலும், அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப் பட்டதாலும் தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரள்கிறது.
திருநெல்வேலி, பாளையங் கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை யில் பெய்த பலத்த மழை யால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடைவீதிகளில் இறுதிகட்ட தீபாவளி விற்பனை பாதிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம்
தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக சங்கரன்கோவி லில் 42 மி.மீ. மழை பதிவானது. ஆய்க்குடியில் 36, தென்காசியில் 27.60, குண்டாறு அணை, அடவி நயினார் அணை யில் தலா 25, சிவகிரியில் 22, செங்கோட்டையில் 21, கடனாநதி அணையில் 20, கருப்பாநதி அணையில் 18, ராமநதி அணையில் 8 மிமீ மழை பதிவானது.
நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடனாநதி அணைக்கு 695 கனஅடி நீர் வந்தது. இந்த அணை ஏற்கெனவே நிரம்பிவிட்டதால் அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது.
ராமநதி அணைக்கு 128 கனஅடி நீர் வந்தது. அணை நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 79.80 அடியாக இருந்தது. கருப்பாநதி அணையும் ஏற்கெனவே நிரம்பிவிட்டதால் அணைக்கு வரும் 300 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ள தால் அணைக்கு வரும் 87 கனஅடி நீர் அப்படியே வெளி யேற்றப்படுகிறது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 127.25 அடியாக இருந்தது.
மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் குற்றாலம் அருவிகளில் நேற்று முன்தினம் இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம் பிரதான அருவிக்கரையில் நடைபாதையில் அமைக்கப்பட்டிருந்த டைல்ஸ் கற்கள் வெள்ளத்தில் சேதம் அடைந்தன.
வெள்ள அபாய எச்சரிக்கை
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி, தென்காசி முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் பிரதான அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் கணிசமான அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
எனவே, தாமிரபரணி ஆற்றின் இருகரை யோரங்களிலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நீர்வரத்து அதிகம் இருப்பதால் ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம். மழை தொடர்பான இடர்கள் குறித்த தகவல்களை 1077, 0462 250 1012, 0462 250 1070 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்.