மருத்துவக் கலந்தாய்வில் வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு குறித்துச் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்துச் சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
''தமிழகத்தில் இதுவரை 5.93 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 60 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தமிழகத்தில் 32,260 டெங்கு பரிசோதனைகளைக் கடந்த ஆண்டு எடுத்தோம். நடப்பாண்டில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 405 பேருக்கு எடுத்துள்ளோம்.
டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்யும் மத்தியக் குழு வருகை சம்பந்தமாக அதிகாரபூர்வ தகவல் ஏதும் இல்லை. டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஆயிரக்கணக்கில் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் 489 பேர் மட்டுமே தற்போது டெங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நீட் தேர்வு முடிவுகள் வந்துள்ள நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்று முடிந்தபிறகு மாநில மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும். இதில் 10.5% இட ஒதுக்கீடு குறித்துச் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.
அனுமதிக்காகக் காத்திருந்த 4 புதிய கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. எனவே 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் 1,450 இடங்கள் இந்த ஆண்டு புதிதாகக் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது''.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.