தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி சனிக்கிழமை அன்று அரசு விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் வரும் 04.11.2021 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அரசு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த ஆண்டு வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை வருகிறது. வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை அளித்தால் ஊருக்குச் சென்று வருபவர்களுக்கு வசதியாக இருக்கும் என்று அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து 05/11/2021 அன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டது.
கரோனா தொற்று அச்சம் காரணமாகப் பள்ளிகள் தாமதமாகத் திறக்கப்பட்ட நிலையில், சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இதற்கிடையே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசுக்கு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. இந்நிலையில், 06/11/2021 சனிக்கிழமை அரசு விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்துப் பள்ளிக் கல்வி ஆணையர் இன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ''தீபாவளியை ஒட்டி நவம்பர் 5 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ஆசிரியர் சங்கங்களில் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் வரும் சனிக்கிழமை அன்று அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கி ஆணையிடப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.