தமிழகம்

முதல்வருக்கு நன்றி; பிற வீரர்களுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும்: மாரியப்பன் தங்கவேலு

செய்திப்பிரிவு

பணி ஆணை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாரியப்பன் தங்கவேலு நன்றி தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார்.

கடந்த பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் இந்தப் போட்டியிலும் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

கடந்த மாதம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, தனது வெள்ளிப் பதக்கத்தைக் காண்பித்து வாழ்த்து பெற்ற மாரியப்பன். அரசுப் பணி வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் மாரியப்பனுக்கு இன்று (புதன்கிழமை) பணி ஆணையை முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் வழங்கினார். தமிழ்நாடு காகித ஆலையில் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பன் தங்கவேலுவுக்குத் துணை மேலாளர் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாரியப்பன் தங்கவேலு கூறும்போது, “வேலைவாய்ப்பு வேண்டி தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருந்தேன். தற்போது அந்தக் கோரிக்கை நிறைவேறியுள்ளது.

அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எனக்கு அரசு வேலை கிடைக்க உதவி புரிந்தார். அவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்ததாக ஆசிய தடகளப் போட்டிகள், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்காக பயிற்சிகள் எடுத்து வருகிறேன். நிச்சயம் அப்போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்துக்குப் பெயர் வாங்கித் தருவேன்.

தமிழக அரசு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கிறது. இவ்வாறு பிற வீரர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தந்தால் அவர்கள் தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் பெயர் வாங்கித் தருவார்கள். தமிழக அரசு வீரர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது. வீரர்களும் சலுகைகளைப் பயன்படுத்திக் கொண்டு பதக்கம் வெல்ல வேண்டும்” என்றார்.

SCROLL FOR NEXT