வேலூர் கோட்டப் பொதுப்பணித்துறை தொழில்நுட்பக் கல்விச் செயற்பொறியாளரிடம் இருந்து கணக்கில் வராத 21 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் ஓசூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று வரும் சோதனையில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் பொதுப்பணித்துறை தொழில்நுட்பக் கல்விச் செயற்பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மாவட்டங்கள் அடங்கியுள்ளன. இங்கு மேற்கண்ட மாவட்டங்களில் கட்டப்படும் அனைத்து அரசுக் கல்லூரிகளின் கட்டிடங்களுக்கு ஒப்பந்தம் வெளியிடுவது, பணிகளைப் பார்வையிடுவது, நிதியை விடுவிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனிடையே, வேலூர் கோட்டத் தொழில்நுட்பக் கல்விச் செயற்பொறியாளராகப் பணியாற்றி வரும் ஷோபனா (57) என்பவர் தீபாவளியை முன்னிட்டு ஒப்பந்ததாரர்களிடம் பணம் வசூலிப்பதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) கிருஷ்ணராஜ் தலைமையிலான காவலர்கள் குழுவினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, தொரப்பாடி-அரியூர் சாலையில் உள்ள உணவகம் அருகே ஷோபனா அரசு வாகனத்தில் நேற்று இரவு 9.30 மணியளவில் காத்திருந்துள்ளார். அப்போது அதிரடியாக வந்த லஞ்ச ஒழிப்புத்துறைக் காவலர்கள் வாகனத்தை சோதனை செய்ததில் கணக்கில் வராத 5 லட்சம் ரூபாய் பணத்தைக் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பணத்திற்கு ஷோபனா உரிய விளக்கம் அளிக்காத நிலையில் மாவட்ட அலுவல் ஆய்வுக்குழு துணை அலுவலர் முருகன் அளித்த புகாரின் பேரில் கணக்கில் வராத பணம் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஷோபனா மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை விடுதியில் ஷோபனா தங்கியுள்ள அறையில் இன்று அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அதில், அந்த அறையில் இருந்து கட்டுக்கட்டாக 15.85 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 4 லட்சம் மதிப்புள்ள மூன்று காசோலைகள் மற்றும் அலுவலகம் தொடர்பான 18 ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.
அதேநேரம், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு அடிப்படையில் ஷோபனாவின் சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். இதில் ஒரு கோடிக்கும் அதிகமாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து ஷோபனாவுக்குச் சொந்தமான இடத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.