மத்திய அரசின் திட்டங்களை எதிர்ப்பது என்பது தமிழகத்தில் வாடிக்கையாகவும், வேடிக்கையாகவும் உள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மத்திய அரசின் நலத் திட்டங்களால் பயன்பெறும் அதிக பயனாளிகள் உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது.
புதிய வேளாண்மை சட்டம், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று கொண்டு வரப்பட்ட சட்டம். அதை அரசியலுக்காக பலர் எதிர்த்து வருகின்றனர். வேளாண்மை சட்டத்துக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, நேரத்தை வீணாக்கியுள்ளனர். இது விவசாயிகளுக்கு எதிரானதீர்மானமாகும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான விலையை அவர்களே நிர்ணயம்செய்யக் கூடாது என திமுகஅரசு நினைக்கிறது. மத்திய அரசின்திட்டங்களை எதிர்ப்பது என்பதுதமிழகத்தில் தான் வாடிக்கையாகவும், வேடிக்கையாகவும் உள்ளது.
இலங்கையில் சிறையில் உள்ளதமிழகத்தைச் சேர்ந்த 23 மீனவர்களை தமிழகத்துக்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. 2014-ம்ஆண்டுக்கு முன்பாக 600 தமிழகமீனவர்கள் கொலை செய்யப்பட்டுஉள்ளனர். ஆனால், 2014-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு மீனவர் கூட கொல்லப்படவில்லை. தற்போது சில சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அதுஏன் நடைபெற்றது? எப்படி நடைபெற்றது? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். மீனவர்கள் நலனில் முழுமையாக அக்கறை செலுத்தி வருகிறோம்.
தமிழக மீனவர்களின் நலனுக் காக ரூ.20 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மீனவ பெண்களின் வாழ்வு மேம்பட, கடல்பாசி சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை காசிமேடு துறைமுகம் நவீனப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்திலிருந்து நாட்டின் சுதந்திரத்துக்காக பாடுபட்ட, அறியப்படாத சுதந்திர போராட்ட தியாகிகளை போற்றும் விதமாக அவர்களின் வாழ்க்கை வரலாற்றை பொதிகை தொலைகாட்சியில் விரைவில் ஒளிபரப்பு செய்ய உள்ளோம் என தெரிவித்தார்.
‘மெட்ராஸ் பிஸ்சரிங் ஹார்பர்’
பின்னர், மத்திய இணை அமைச்சர்கள் எல்.முருகன், ஏ.நாராயணசாமி ஆகியோர் திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நேயர்களுடன் வானொலி நேரலையில் பேசினர்.
பின்னர் மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக மீனவர்களுக்கான கடல்பாசி திட்டத்தை கொண்டு வருவதற்கான பணிகளை பிரதமர் மோடி தொடங்கியுள்ளார். மீனவ சகோதர, சகோதரிகளுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதற்காக இந்த திட்டத்தை தமிழக அரசும் பரிந்துரை செய்துள்ளது. ‘மெட்ராஸ் பிஸ்சரிங் ஹார்பர்' என்ற பெயரில் புதுமாதிரியான துறைமுகத்தை சென்னையில் உருவாக்க உள்ளோம். அதில் ஐஸ் யூனிட், பிரீஸிங் யூனிட், பேக்கிங் யூனிட் உள்ளிட்டவை இருக்கும். தமிழக மீனவர்களுக்கு ஏற்றுமதிக்கான வாய்ப்பினை உருவாக்கும் நோக்கில் இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது.
கொச்சி, விசாகப்பட்டினம், சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் இத்தகைய துறைமுகம் அமைக்கப்பட உள்ளது. அகில இந்திய வானொலியில் விவசாய செய்திகளுக்கான நேரம் குறைக்கப்படாது. மீனவர்களுக்கு டீசலுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதை உயர்த்தி தரும்படி மீனவர்கள் விடுத்துள்ள கோரிக்கையை பரிசீலித்து வருகிறோம்.
சட்டப்பேரவை தேர்தலின்போது செயல்படுத்த முடியாத திட்டங்களை அறிக்கையாகவும், வாக்குறுதியாகவும் திமுகவினர் கொடுத்தனர். குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதாக கூறினர். இதுவரை எதுவும் கொடுக்கவில்லை என்றார்.