விருத்தாசலம் தொகுதியில் புதிய முயற்சியாக திருநங்கைகளை கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மதுரையை சேர்ந்த வெற்றி கிராமிய கலைக் குழுவினரை கொண்டு நடத்தப்பட்ட பிரச்சாரத்தில் திருநங்கைகள் கலந்துகொண்டு ஆடல் மற்றும் வீதி நாடகங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பது முதல் தேர்தல் நடத்தும் அலுவலரை தொடர்பு கொள்வது வரை வீதி நாடங்கள் மூலம் விளக்கினர்.
இது தொடர்பாக கோட்டாட்சியர் செந்தில்குமாரிடம் கேட்டபோது, “திருநங்கைகளை பொது நோக்கத்துக்காக பயன்படுத்தினால் பொதுமக்களிடத்தில் எளிதாக சென்றடையும் என்பதால் அவர்கள் மூலம் இந்த பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம்” என்றார்.
கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் திருநங்கை ராணி கூறும்போது, “முதல்முறையாக தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளோம். இதை வருமானத்துக்காக மட்டும் செய்யாமல், அரசின் சேவையில் எங்களையும் அர்ப்பணித்துக் கொண்டுள்ளோம். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு தொகையை ஆதரவற்ற திருநங்கைகளுக்கும், கருணை இல்லங்களுக்கும் வழங்கி வருகிறோம்” என்றார்.