தமிழகம்

சமூக நீதி நிலைக்க வன்னியர் இட ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து மேல்முறையீடு கூடாது: கருணாஸ் வலியுறுத்தல்

என்.சன்னாசி

சமூக நீதி நிலைக்க வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு ரத்தை எதிர்த்து மேல்முறையீடு கூடாது என்று கருணாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மதுரையிலிருந்து சென்னை சென்ற முன்னாள் எம்எல்ஏவும், முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் தலைவருமான கருணாஸ், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:

''அதிமுக ஆட்சியில் அவசரமாகக் கொண்டுவரப்பட்டது வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு. இதை மதுரை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதை அனைத்து சமுதாயத்தினர் சார்பிலும் வரவேற்கிறேன். சமூக நீதி நிலைக்க, தமிழக அரசு மேல்முறையீடு செய்யாமல் இருப்பதே அனைத்து சமுதாய மக்களை நல்வழிப்படுத்தச் சரியாக இருக்கும் என்பது எனது கருத்து. சாமானிய மக்கள் நீதிமன்றத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை இந்தத் தீர்ப்பு உறுதி செய்கிறது.

சுதந்திரத்திற்குப் போராடி, நீண்ட நாட்கள் சிறையில் இருந்த முத்துராமலிங்கத் தேவர் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைக்கக் கோரி, தொடர்ந்து கோரிக்கை வைக்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசிற்கு திமுக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். இதற்காக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது என்பது அவர்களது கட்சி விவகாரம். அதுபற்றி நான் பேச விரும்பவில்லை. நகர்ப்புறத் தேர்தலுக்கு முக்குலத்தோர் புலிப்படை நிலைப்பாடு பற்றித் தேர்தல் அறிவிப்பிற்குப் பின், நிர்வாகிகளிடம் பேசி முடிவை அறிவிப்போம்''.

இவ்வாறு கருணாஸ் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT