கரூரில் வேளாளர் ஆய்வுப் புத்தக வெளியீட்டு விழா நடத்த அனுமதிக்கக் கோரிய வழக்கில் டவுன் டிஎஸ்பி பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூரைச் சேர்ந்த கார்வேந்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவில்,
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை சார்பாக கரூரில் தனியார் மண்டபத்தில் வேளாளர் ஆய்வுப் புத்தக வெளியீட்டு விழா அக். 25-ல் நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும், இதில் மதுரை ஆதீனம் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்க இருப்பதாகக் குறிப்பிட்டும், போலீஸார் விழா நடத்த அனுமதி மறுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், புத்தக விழாவுக்கு அனுமதி வழங்கக் கூடாது என ஆட்சேபக் கடிதம் வழங்கிய புதிய திராவிடக் கழகம் கட்சியினருடனும் சமரசப் பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு எட்டப்பட்டுள்ளது. எனவே, விழாவுக்கு அனுமதி மறுத்து போலீஸார் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, நவ. 14-ல் கரூரில் வேளாளர் ஆய்வுப் புத்தக வெளியீட்டு விழா நடத்த போலீஸாருக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளங்கோவன், மனு குறித்து கரூர் துணை கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நவ. 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.