தமிழகம்

சார் பதிவாளர் அலுவலகங்களில் ரூ.20,000க்கு மேற்பட்ட பணப் பரிவர்த்தனையை வங்கிகள் வழியாக மேற்கொள்ளக் கோரி வழக்கு: பத்திரப் பதிவுத்துறை பதிலளிக்க உத்தரவு 

கி.மகாராஜன்

சார் பதிவாளர்கள் அலுவலகங்களில் நடைபெறும் ரூ.20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனைத்து பணப் பரிவர்த்தனைகளையும் வங்கிகள் மூலமாக மேற்கொள்ளக் கோரி தாக்கலான மனுவுக்கு பதிவுத்துறைத் தலைவர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி உடன்குடியைச் சேர்ந்த சுப்பையா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''வருமான வரிச் சட்டப் பிரிவு 269-ல் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் நடைபெறும் அனைத்துப் பணப் பரிவர்த்தனைகளும் வங்கிகள் மூலமாகவே நடைபெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. சார் பதிவாளர் அலுவலகங்களில் தினமும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பத்திரப் பதிவுகள் நடைபெறுகின்றன. அனைத்துப் பதிவுகளிலும் பணப் பரிவர்த்தனைகள் வங்கி மூலமாக நடைபெறுவதில்லை.

உடன்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் ஒரு நாளில் 2,000 பத்திரப் பதிவுகள் வரை நடைபெற்றால், அதில் 128 பத்திரப் பதிவுகள் மட்டுமே வங்கி பரிவர்த்தனை மூலம் நடைபெறுகிறது. மொத்தப் பதிவுகளில் 2.35 சதவீதப் பதிவுகள் மட்டுமே சட்டப்படி வங்கி பரிவர்த்தனை அடிப்படையில் நடைபெற்றுள்ளது. 97.65 சதவீதப் பதிவுகள் நேரடி பணப் பரிவர்த்தனை மூலம் நடைபெற்றுள்ளன.

இதனால், சார் பதிவாளர் அலுவலகங்களில் ரூ.20 ஆயிரத்திற்கும் மேல் நடைபெறும் அனைத்து பணப் பரிவர்த்தனைகளும் வங்கிகள், காசோலை, ஆன்லைன் பரிவர்த்தனை மூலமே நடைபெற வேண்டும் என உத்தரவிட வேண்டும்.''

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே.முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனு குறித்து வணிக வரித்துறைச் செயலர், பத்திரப் பதிவுத்துறைத் தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT