தமிழகம்

புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு - ரூ.142.16 கோடியில் 3,510 குடியிருப்புகள் கட்டும் திட்டம்: வேலூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு ரூ.142.16 கோடி மதிப்பில் 3,510 புதிய குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை வேலூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி, ரூ.53.51 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

தமிழகத்தில் 106 முகாம்களில் வசிக்கும் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய குடியிருப்புகள் அரசு சார்பில் கட்டிக்கொடுக்கப்பட உள்ளன.இதற்கான திட்ட அடிக்கல் நாட்டு விழா வேலூர் அடுத்த மேல்மொணவூரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய விளையாட்டுத்திடலில் இன்று (நவ.2) நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகள் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் செய்யப்பட்டுள்ளன.

இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்காக ரூ.142.16 கோடி மதிப்பில் 3,510 குடியிருப்புகள், ரூ.30 கோடியில் அடிப்படை திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.53.51 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு இலவச எரிவாயு உருளை இணைப்பு, குடும்ப அட்டை உள்ளிட்ட 10 நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி உரையாற்ற உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வேலூர் வந்தடைந்தார். வேலூர் அண்ணா சாலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ள அவர், இன்று காலை 9 மணியளவில் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இதில், அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். முதல்வர் பாதுகாப்பு பணிக்காக வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு மேற்பார்வையில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 800 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT