தீபாவளி பண்டிகை வரும் 4-ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் எந்தவித சிரமமின்றி, பாதுகாப்பாக தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திட ஏதுவாக, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 20,334 பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அரசு விரைவு பேருந்துகளில் இதுவரை 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து தினமும் இயங்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் 391 சிறப்பு பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன.
பொதுமக்கள் கூட்ட நெரிசல் இன்றி பயணிக்க கோயம்பேடு உட்பட பல்வேறு இடங்களில் இருந்து பேருந்துகள் பிரித்து இயக்கப்பட்டன. செங்குன்றம் வழியாக பொன்னேரி, ஊத்துக்கோட்டை பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்தும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்பட்டன.
திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்தும் வேலூர், ஆரணி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பதி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்பட்டன. திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, வந்தவாசி, செஞ்சி பேருந்துகளும், வடலூர், சிதம்பரம் கடலூர், புதுச்சேரி பேருந்துகளும் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்பட்டன.
விரைவுப் பேருந்துகள்
கோயம்பேட்டில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், ஈரோடு, கோயம்புத்தூர், பெங்களூர், சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், செங்கோட்டை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விரைவு பேருந்துகளும் இயக்கப்பட்டன. வரும் 3-ம் தேதி வரையில் மேற்கண்ட பேருந்து நிலையங்களில் இருந்து பிரித்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: சிறப்பு பேருந்துகளை நேற்று முதல் இயக்கினோம். இருப்பினும், மழை காரணமாக மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. இன்றும், நாளையும் மக்கள் அதிகளவில் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கிறோம். சென்னையில் இருந்து 1,575 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 3,675 பேருந்துகளை இன்று இயக்க ஏற்பாடு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.