தமிழகம்

‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் மூலம் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை: சுகாதாரத் துறை தகவல்

செய்திப்பிரிவு

தமிழக சுகாதாரத் துறையின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை கடந்த ஆக. 5-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தில், பயனாளிகளின் இல்லங்களுக்குச் சென்று முக்கியமான மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. 45 வயதும், அதற்கு மேற்பட்ட உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கான மருந்துகளை வழங்குதல், நோய் ஆதரவு மற்றும் இயன்முறை சிகிச்சை சேவைகள் வழங்குதல், சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான பைகளை வழங்குதல், அத்தியாவசிய மருத்துவ சேவைகளுக்கான பரிந்துரை போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.

இத்திட்டம் முதற்கட்டமாக 50 வட்டாரங்களிலுள்ள 1,172 அரசு துணை சுகாதார நிலையங்கள், 189 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 மாநகராட்சிகளில் (சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திரு நெல்வேலி) தலா ஒரு மண்டலம் என மொத்தம் 21 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கப்பட்டது. அடுத்ததாக 335 வட்டாரங்களில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் மாநகராட்சிகளிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இத்திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள், மாநிலத்தின் பிற கிராம மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் மக்களைச் சென்றடையும் வகையில் திட்டத்தை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தால் இதுவரை மொத்தம் 30 லட்சத்து 7 ஆயிரத்து 205 பேர் பயனடைந்துள்ளனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில், 12.53 லட்சம் பேர் உயர் ரத்த அழுத்த நோயாளிகள், 8.54 லட்சம் பேர் நீரிழிவு நோயாளிகள் ஆவர். மேலும், வலி நிவாரண சிகிச்சையை 1.02 லட்சம் பேரும், இயன்முறை சிகிச்சையை 1.79 லட்சம் பேரும் பெற்று பயனடைந்துள்ளனர். 626 பேர் டயாலிசிஸ் சிகிச்சை பெற்றுள்ளனர்.

SCROLL FOR NEXT