தமிழகம்

கிண்டி சின்னமலையில் மாநகர பேருந்து மோதி ஐ.டி. ஊழியர் உயிரிழப்பு: மழைநீர் தேங்கி நின்ற சாலை பள்ளத்தில் நிலை தடுமாறியதால் சோகம்

செய்திப்பிரிவு

சென்னை சின்னமலை பகுதியில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர், சாலையில் உள்ள பள்ளம் காரணமாக நிலை தடுமாறி மாநகர அரசு பேருந்தில் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

சென்னை பெசன்ட் நகர் பேருந்து நிலையத்திலிருந்து வடபழனி நோக்கிச் செல்லும் மாநகர அரசு பேருந்து சின்னமலை வழியாக நேற்று காலை 8.40 மணியளவில் சென்றுள்ளது. அப்போது அதே வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த இளைஞர் பேருந்தில் மோதியுள்ளார். அதில் விபத்து ஏற்பட்டு இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர் தலையில் பேருந்தின் பின் சக்கரம் ஏறியுள்ளது. இதனால் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தகவல் அறிந்து கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர். இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்டமாக சம்பவ இடத்தருகே உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் ராமாபுரத்தைச் சேர்ந்த முகமது யூனுஸ் (31) என்ற ஐ.டி ஊழியர் விபத்தில் பலியானது தெரிய வந்துள்ளது.

வேலைக்கு சென்று கொண்டிருந்த முகமது யூனுஸ் சின்னமலை பகுதி வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, தனியார் விடுதிக்கு எதிரே சாலையில் உள்ள மழை நீர் தேங்கி நின்ற பள்ளத்தில் வாகனம் இறங்கியதால் நிலை தடுமாறியுள்ளார். அப்போது அவரது இரு சக்கர வாகனத்துக்கு முன்பாக சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பக்கவாட்டில் மோதியதால், நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

அப்போது மாநகரப் பேருந்து இடையே சிக்கி பேருந்தின் பின் சக்கரம் தலையில் மீது ஏறிச்சென்றதால் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்த காட்சியானது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதனை அடிப்படையாக வைத்து பேருந்து ஓட்டுநர் தேவராஜை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SCROLL FOR NEXT