கூடலூர் அருகே கடந்த 8 நாட்களாகப் பிடிபடாமல் இருந்த ஆட்கொல்லி புலியை, அதிரடிப்படையினர் நேற்று சுட்டுக் கொன்றனர். எதிர்பாராதவிதமாக துப்பாக்கிக் குண்டு பாய்ந்து அதிரடிப்படை வீரர், ஆயுதப் பிரிவு போலீஸ்காரர் ஆகியோர் காயமடைந்தனர்.
கடந்த 11-ம் தேதி, நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட வுட்பிரையர் எஸ்டேட்டில், வட மாநிலத் தொழிலாளி மது ஓரனை புலி தாக்கிக் கொன்றது.
இதைத் தொடர்ந்து, மனித வேட்டை புலியைப் பிடிக்க வனத்துறை, அதிரடிப் படையினர் மற்றும் ஆயுதப் பிரிவு போலீஸார் அடங்கிய 4 குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்று வந்தது.
மேலும், அதன் நடமாட்டத்தைக் கண்காணிக்க 48 கேமராக்கள் பொருத்தப்பட்டன. 9 கூண்டுகள் மற்றும் 5 மரக் குடில்களும் அமைக்கப்பட்டன. கடந்த 8 நாட்களாகக் கூண்டில் சிக்காமல் புலி சுற்றித் திரிந்து வந்தது.
தப்பியது புலி
இந்நிலையில், பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மோப்ப நாய் ராணா, குந்தலாடிப் பகுதியில் புலியின் நடமாட்டத்தைக் கண்டறிந் தது. இதனால், நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் கால்நடை மருத்துவர்கள் விஜயராகவன், பிராயாக் ஆகியோர் மரக் குடிலில் தங்கியிருந்து கண்காணிப்புப் பணியை மேற்கொண்டனர். அப்பகுதியில் மாடு ஒன்றை புலி தாக்கியபோது, மயக்க ஊசியைத் துப்பாக்கி மூலமாக செலுத்தி மருத்துவர்கள் சுட்டனர். ஆனால், புலி அங்கிருந்து தப்பியது.
இந்நிலையில், நேற்று காலை முதல் தீவிரக் கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. பகல் 12.30 மணி அளவில் புலியின் உறுமல் சத்தம் கேட்டதால், கோவை மண்டல வனப் பாதுகாவலர் அன்வர்தீன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா, கூடலூர் வன அலுவலர் தேஜஸ்வீ ஆகியோர் தலைமையில் ஆபரேஷன் மேற்கொள்ளப்பட்டது.
முதுமலை புலிகள் காப்பக வழிகாட்டிகள் காலன், பொம்மன் தலைமையிலான வனக் காவலர் கள், புலி நடமாட்டத்தைக் கண்டறிந்தனர். கால்நடை மருத்துவர் விஜயராகவன் புலியை அடையாளம் கண்டதும், அதி ரடிப் படையினர் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். எதிர்பாராத விதமாகக் குண்டு பாய்ந்து, அதிரடிப்படை வீரர் சந்தோஷ் காயமடைந்தார். அவர் மீது புலி பாய்ந்தபோது, உடனிருந்த அதிரடிப்படையினர் புலியைச் சுட்டுக்கொன்றனர். கூடலூர் வன அலுவலர் அலுவலகத்துக்குக் கொண்டுவரப்பட்ட புலியின் சடலத்தை, கால்நடை மருத்துவர் கள் பிரேதப் பரிசோதனை செய் தனர். பின்னர், அங்கேயே எரியூட்டப்பட்டது.
இதுதொடர்பாக கோவை மண்டல வனப் பாதுகாவலர் அன்வர்தீன் கூறும்போது, “புலியின் நடமாட்டம் கண்டறியப்பட்டதும் சுடப்பட்டது. இறந்த ஆண் புலிக்கு சுமார் 8 வயது இருக்கும். அதன் இடது முன் காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது” என்றார்.
துப்பாக்கிச் சூட்டின்போது அதிரடிப்படை வீரர் சந்தோஷ், ஆயுதப் பிரிவு போலீஸ் ரவி ஆகி யோர் காயமடைந்தனர். இருவரும் கூடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர். படுகாயமடைந்த சந்தோஷுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கேரள மாநிலம் பெருந்தல்மன்னாவுக்குக் கொண் டுச் செல்லப்பட்டார். சந்தோஷின் இடுப்புப் பகுதியில் குண்டு பாய்ந்துள்ளது.