வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடம் வங்கிகள் கடன் வசூலிப்பதில் நிர்ப்பந்தம் செய்யக்கூடாது என மாவட்ட நிர்வாகம் ஆணை வழங்க வேண்டும் என்று கோவை விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை விவசாயிகள் சங்க மாநகர் மாவட்டத் தலைவர் சி.தங்கராஜ் தலைமையில் விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். ஆட்சியரிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கொங்கு மண்டலம் 3 ஆண்டுகளாக வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது தஞ்சை ஒரத்தநாடு பகுதியிலும் நீர் பற்றாக்குறை காரணமாக விவசாயிகள் விளைச்சல் இல்லாமல் வறட்சியால் பாதிக்கப் பட்டுள்ளனர். ஆனால் கடன் கொடுத்த வங்கிகள் விவசாயிகளை துன்புறுத்துகின்றன. அழகர் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இதற்காக அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.
கோவை மாவட்டத்திலும் வங்கிகள், நகைக்கடன் மற்றும் வேளாண்மை சார்ந்த கடன் பெற்ற விவசாயிகளிடம் வணிக ஆண்டு மார்ச் 31-ல் முடிவடைவதால் பல நெருக்கடிகளை கொடுக்கின்றன. பயிர்க்கடன் பெற்றவர்கள் நகைக்கடன் இருக்கும் பட்சத்தில் நகையை எடுக்க விடாமல், பயிர்க்கடன் செலுத்தினால் தான் நகையையும் மீட்க முடியும் என்று கூறுகின்றனர். ஆட்சியர் தலையிட்டு, அதிகாரிகள் கூட்டுறவு மற்றும் தேசிய வங்கி மேலாளர்களுக்கு கடன் வசூல் நிர்ப்பந்தம் செய்யக்கூடாது என்று ஆணை வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.