அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இன்று (நவ 1) அதிகாலை இடி தாக்கியதில் சுவர் இடிந்து விழுந்து பாட்டி, பேரன் இடுபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த 2 தினங்களாக இரவு நேரங்களில் மழை பெய்கிறது. இந்நிலையில், இன்று அதிகாலையில் ஜெயங்கொண்டம் பகுதியில் மின்னல் மற்றும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக ஜெயங்கொண்டம் தேவாங்க முதலியார் தெருவில் வசிக்கும் சுப்பிரமணியன்(68) என்பவரது வீட்டின் மீது சுமார் 4 மணியளவில் இடி விழுந்துள்ளது.
இதனால், அவரது மாடியில் இருந்த நீர்த்தேக்க தொட்டியின் சுவர் இடிந்து, அருகேயுள்ள ஆறுமுகம் என்பவரது ஓட்டு வீட்டின் மீது விழுந்துள்ளது. இதில், வீட்டினுள் உறங்கிக்கொண்டிருந்த ஆறுமுகம், தாய் லட்சுமி (85), ஆறுமுகத்தின் 3 வது மகன் டிப்ளமோ படித்துவிட்டு தற்காலிகமாக தனியாரில் எலக்ட்ரீசியன் ஆக கூலி வேலை செய்துவரும் அஜித்குமார் (25) ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கி அதேயிடத்தில் உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த ஜெயங்கொண்டம் போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறையினர் இருவரது உடல்களையும் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த அஜித்குமாருக்கு இன்னும் 15 தினங்களில் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.