முல்லைப் பெரியாறு அணையின் உரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தி தேனி மாவட்டம் கூடலூரில் நவ.12-ல் உண்ணாவிரதம் நடைபெறும் என்று அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநிலத் தலைவர் பிஆர். பாண்டியன் தெரிவித்தார்.
அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவின் மதுரை மண்டல நிர்வாகிகள் அவசரக் கூட்டம் அதன் கவுரவத் தலைவர் ஆதிமூலம் தலைமையில் மதுரையில் நடந்தது.
கூட்டத்தில் மாவட்டச் செயலர் மேலூர் அருண், தலைவர் மணிகண்டன், வழக்கறிஞர்கள் முத்துராமலிங்கம், ராவணன், உயர்மட்டக்குழு உறுப்பினர் தர்மலிங்கம், சிவகங்கை மாவட்டச் செயலர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சட்ட விரோதமாக நுழைந்தனர்
கூட்டத்துக்குப் பிறகு பிஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியது: கேரள அமைச்சர்கள் முல்லைப் பெரியாறு அணைக்குள் சட்ட விரோதமாக நுழைந்து தமிழகத்துக்குச் சொந்தமான தண்ணீரை தமிழக அரசின் உரிய அனுமதியின்றி திறந்து வீணடித்துள்ளனர். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அரசியல் சட்ட அமைப்புக்கு எதிராகச் செயல்பட்ட கேரள அமைச்சர்கள் ரோஸி அகஸ்டின், ராஜன் ஆகிய இருவரையும் குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய வேண்டும். அணையை மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்புக்குக் கீழ் கொண்டுவர வேண்டும்.
முல்லைப் பெரியாறில் தமிழகத்தின் உரிமையை உறுதி செய்திட வலியுறுத்தி பல்லாயிரம் விவசாயிகள் ஒன்று திரண்டு கூடலூர் லோயேர் கேம்ப் அருகில் நவ.12-ல் உண்ணாவிரதம் மேற்கொள்ள இருக்கிறோம்.
கேரள அரசுக்கு எதிராக நடக்கும் உண்ணாவிரதத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் கூடலூர் உட்பட தேனி மாவட்டம் முழுவதும் ஒரு நாள் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை அடைக்க வேண்டும் என வர்த்தகர்களைக் கேட்டுக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இடுக்கி மாவட்ட ஆட்சியர் கொடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து கேரள அமைச்சர்கள் தண்ணீரை திறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அணைப் பிரச்சினை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கும்போது கேரள அமைச்சர்கள் எப்படி தண்ணீரை திறந்தனர் என்ற கேள்வி எழுகிறது.
நவ.12-ல் நடைபெறும் உண்ணாவிரதம் முதல்கட்டப் போராட்டமே. இதைத் தொடர்ந்து தீவிரப் போராட்டங்களை நடத்தி முல்லைப் பெரியாறு அணையின் உரிமைகளை மீட்டெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.