கடையம் ஒன்றியக்குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்த பெண்ணின் மகன், மாவட்ட திமுக பொறுப்பாளர் பணம் கேட்டதாக குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழக முதல்வர் தீர்வு அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு திமுக சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜெயக்குமார், மறைமுகத் தேர்தலில் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதே கட்சியைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவர் வெற்றிபெற்றார்.
இந்நிலையில், செல்லம்மாள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கடிதம் அளித்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, ‘‘இது உட்கட்சி பிரச்சினை என்றும், மேற்கொண்டு எதுவும் சொல்ல விரும்பவில்லை’’ என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மாவட்ட திமுக பொறுப்பாளர் பொ.சிவபத்மநாதன் ரூ.1 கோடியே 10 லட்சம் கேட்டதாக செல்லம்மாள் பேசுவது போன்ற வீடியோ வெளியானது. இதையடுத்து செல்லம்மாள் மீது தென்காசி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் சிவபத்மநாதன் புகார் மனு அளித்தார்.
இந்நிலையில், செல்லம்மாளின் மகன் சதன் வெளியிட்ட வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் பரவியது. அதில், “மக்கள் ஆதரவால் எனது தாயார் கடையம் ஒன்றியக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனது தந்தை 35 ஆண்டுகளாக அரசியலில் உள்ளார். அவர் 30 ஆண்டுகளாக கட்சிக்காக போஸ்டர் ஒட்டினார். நானும் 10 ஆண்டுகளாக போஸ்டர் ஒட்டியுள்ளேன்.
மாவட்ட பொறுப்பாளர் மீது புகார்
இந்நிலையில், மாவட்ட பொறுப்பாளர் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் தந்தால்தான் ஒன்றியக்குழு தலைவராக இருக்க முடியும் என்று கூறினார். பணம் இருந்தால்தான் அரசியலில் இருக்க முடியும் என்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு தமிழக முதல்வர்தான் தீர்வு அளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.