அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடத்தவும், வாகனங்களை பயன்படுத்தவும் இணையதளம் மூலம் அனுமதி பெறலாம் என திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள் நடத்தவும், வாகனங்களை பயன்படுத்தவும் முன்கூட்டியே தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். அந்த அனுமதியை பெற, www.elections.tn.gov.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இணையதளம் மூலம் விண்ணப்பிக்கப்படும் மனுவானது, உடனடியாக சம்பந்தப்பட்ட காவல்துறையினருக்கு கிடைக்கும். அவர்கள், ஆன்லைனிலேயே தடையின்மை அனுமதி அளித்ததும் தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலருக்கு கிடைக்கப்பெறும். அவராலும் ஆன்லைனிலேயே ஒப்புதல் அளிக்கப்படும்.
மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடக்கும் தேர்தல் விதிமீறல்கள் மற்றும் புகார்களை, ‘வாட்ஸ் அப்’ வசதியுடன் கூடிய ’ 8220600569’ என்ற தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.