தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 
தமிழகம்

டாஸ்மாக் பார்களைத் திறக்கும் அரசு, தீர்த்தக் கிணறுகளையும் திறக்கவேண்டும்- அண்ணாமலை பேட்டி

எல்.மோகன்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பார்களை திறப்பதற்கான நடவடிக்கை எடுத்துள்ள அரசு, ராமேஸ்வரம் உட்பட கோயில்களில் தீர்த்தக் கிணறுகளை திறக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கன்னியாகுமரி வந்தார். அவர் நாகர்கோவிலில் நடந்த சமுதாயத் தலைவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, ’’கன்னியாகுமரி மாவட்டத்தில் பொன் ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சராக இருந்தபோது இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு ரூ.106 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதற்கான நிலம் எடுப்பதுதான் பிரச்சினை. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் இரண்டரை ஏக்கர் நிலம் மாவட்ட நிர்வாகம் ஒதுக்கியது. ஆனால் 5 ஏக்கர் நிலம் வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். இதன் மூலம் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.

தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுடன் இருக்கும் பார்களைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்தள்ளது. ராமேஸ்வரம் கோயிலுக்குள் இருக்கும் 21 தீர்த்தக் கிணறுகளை இதுவரை திறக்காமல் இருக்கிறார்கள். தீர்த்தக் கிணறுகளை நம்பி 600 குடும்பங்களுக்கு மேல் இருக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள கோயில்களில் தீர்த்தக் கிணறுகளை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்களும் பாக்கியம் அடைவர்.

1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் குழந்தைகள் செல்ல வசதியாக அரசு பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். 1956 நவம்பர் 1ம் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. 2018 முதல் நவம்பர் 1ம் தேதி தமிழ்நாட்டு நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2020 நவம்பர் 1ம் தேதி `தமிழ்நாடு` என அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து போட்டிருந்தார். இந்த ஆண்டு ஏன் அதை மாற்ற வேண்டும். நவம்பர் 1ம் தேதிதான் தமிழ்நாட்டு நாளாக இருக்க வேண்டும் என கேட்டுகொள்கிறோம்.

தமிழக அரசின் வீடுதேடிக் கல்வி என்பது வரவேற்கத்தக்க விஷயம். இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் ஒருலட்சத்து 10 ஆயிரத்தி்ற்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். 2020 காலாண்டையும், 2021 காலாண்டையும் கணக்கிடுகையில் இறக்குமதி பெட்ரோலின் அளவு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு தமிழக அரசுக்கு பெட்ரோல் மூலம் 19 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளது. இதைப்போல் மத்திய அரசுக்கும் வருவாய் வந்துள்ளது. பெட்ரோலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதன் மூலம்தான் விலை உயர்வுப் பிரச்சினைக்கான முழுமையான தீர்வு ஏற்படுத்த முடியும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை பொன் ராதாகிருஷ்ணன் கொண்டு வந்தார். அவர் கொண்டு வந்த திட்டங்களை மாநில அரசு செய்தாலே கன்னியாகுமரி மாவட்டம் அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கு செல்லும். மதுரை எய்ம்ஸ்க்கு இடம் கையகப்படுத்துவதில் காலதாமதம் இருந்தது. அங்கு 150 மெடிக்கல் சீட் மத்திய அரசு கொண்டு வருவதாகச் சொன்னது. ஆனால் மாநில அரசு வேண்டாம் என்கிறது. தமிழ்நாட்டிற்கு நல்லது நடக்கிறது என்றால் அதை அரசியல் ஆக்கக்கூடாது.

இந்தியாவில் 2000 ஆண்டுகளாக தீபாவளி பட்டாசு வெடிப்பதை தற்போது ஏன் தடுக்க வேண்டும். பண்டிகை நம் பாரம்பரியம், கலாச்சாரம். எனவே மக்கள் தைரியமாக பட்டாசுகளை வாங்கி வெடிக்க வேண்டும். இதை எட்டரை லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகப் பார்க்கவேண்டும். பாஜகவை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து போட்டால் குண்டாஸ் போடுகிறார்கள். ஆனால் பெண் நிர்வாகிகள் பற்றிப் பதிவுபோட்ட திமுக பிரமுகர்கள் மீது நடவடிக்கை இல்லை. இதுகுறித்துத் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளோம்’’ என்றார்.

பேட்டியின்போது முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.காந்தி, நயினார் நாகேந்திரன், குமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT