தமிழகம்

ஆளுநரின் எதிர்மறைப் போக்கு கைவிடப்பட வேண்டும்: முத்தரசன் கண்டனம்

செய்திப்பிரிவு

ஆளுநரின் எதிர்மறைப் போக்கு கைவிடப்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தமிழ்நாட்டின் புதிய ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவி நேற்று (30.10.2021) பல்கலைக்கழகத் துணைவேந்தர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். வேந்தர், துணை வேந்தர்களை அழைத்துப் பேசுவது வழக்கமான ஒன்று, எனினும் தமிழ்நாடு ஒருமுகமாக நின்று, எதிர்ப்புத் தெரிவிக்கும் தேசியக் கல்விக் கொள்கையைப் படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியிருப்பது எதிர்மறைப் போக்காகும். இது மக்கள் தேர்ந்தெடுத்த அரசின் கொள்கை வகுக்கும் செயல்பாட்டில் குறுக்கிடுவதாகும்.

தமிழ்நாட்டின் தனித்துவத்தைக் கருத்தில் கொண்டு, கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என முதல்வர் மக்களுக்கு உறுதியளித்துள்ள நிலையில், மக்கள் உணர்வுக்கு எதிராக ஆளுநர் தேசியக் கல்விக் கொள்கையைக் குறுக்கு வழியில் அமல்படுத்த முயற்சிப்பது அமைதியை பாதிக்கும் செயலாகும்.

ஆளுநர் மாளிகைக்கு மாநில அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் எண்ணம் இருந்தால் அது உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறையுடன் இசைவாகச் செல்லும் இணக்கமான வழிமுறையை ஆளுநர் பின்பற்ற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது’’.

இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT