தமிழகம்

மாற்றி யோசிக்கும் அரசியல்வாதிகள்: வாக்காளர்களை கவர புதிய உத்திகள்

அ.அருள்தாசன்

தேர்தல் ஆணையம் எத்தனை கெடுபிடிகள் விதித்தாலும் அதையெல்லாம் தாண்டி வாக்காளர்களை கவரும் புதிய உத்திகளை அரசியல் கட்சியினர் கையாள தொடங்கியிருக்கிறார்கள்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாளில் இருந்து பொது சொத்துக்கள் மற்றும் தனியார் இடங்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டு வருகின்றன.

விளம்பரங்கள் அழிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் இதுவரை அரசியல் கட்சிகள் சார்புள்ள 2,236 சுவரொட்டிகள் கிழித்து அப்புறப் படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் வட்டார புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோல் 1,546 சுவர் விளம்பரங்கள் அழிக்கப் பட்டிருக்கின்றன. 645 பேனர்கள் அகற்றப்பட்டிருக்கின்றன.

சுவரொட்டிகளையும், விளம்பரங்களையும் தேர்தல் அதிகாரிகள் அழிப்பது மற்றும் அகற்றுவதால் அரசியல் கட்சிகள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றன. வாக்குச் சாவடிகளின் அருகிலு ள்ள கட்சி கொடிக் கம்பங்களும் அகற்றப்பட்டு வருகின்றன.

ஆணையம் கிடுக்கிபிடி

தங்கள் கட்சி தலைவர்கள் ஏதாவது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்தால் திரும்பிய பக்க மெல்லாம் அவரை வரவேற்று சுவரொட்டிகள் ஒட்டுவது அரசியல் கட்சியினரிடையே நீண்ட காலமாக இருக்கும் வழக்கம்.

அரசு சுவர்கள், பாலங் கள் என்று எல்லா இடத்திலும் சுவரொட்டிகளை ஒட்டுவதும், கட்சி கொடிகள், தோரணங்களை கட்டுவதும் வாடிக்கை. இப்போது அவற்றுக்கெல்லாம் தேர்தல் ஆணையம் கிடுக்கிபிடி விதித்துவிட்டது.

இதனால் தங்களது கட்சி சின்னம், கட்சி கொடிகள் குறித்து மக்களுக்கு குறிப்பாக வாக்காளர் களுக்கு அவ்வப்போது நினைவு படுத்தவும், அதேநேரத்தில் பிரச்சார கூட்டங்களுக்கு வரும் தலைவர்களை வரவேற்கவும் வெறுவிதமாக கட்சியினர் யோசித்திருக்கிறார்கள்.

நடமாடும் சுவர்கள்

அதன் வெளிப்பாடுதான் கடந்த 20-ம் தேதி திருநெல்வேலி தச்சநல்லூரில் திமுகவினரின் வித்தியாசமான வரவேற்பு உத்தி. திமுக சார்பில் திண்ணை பிரச்சாரத்தை தொடங்கி வைக்க வந்த கனிமொழி எம்.பி.யை வரவேற்கும் வகையில் பேனர்களை பனியன்கள் போல் உடலில் தொங்கவிட்டபடி பெண்களும், ஆண்களும் நிறுத்தப்பட்டிருந்தனர்.

மேலும் அவரை வரவேற்க அணிவகுத்த தொண்டர்கள் கட்சி கொடிகளையும், உதய சூரியன் சின்னத்துடன் கூடிய போஸ்டர்கள் ஒட்டிய அட்டைகளையும் தாங்கி நின்றனர். சுவர்களில்தானே சுவ ரொட்டிகளை, பேனர்களை வைக்க கூடாது. நடமாடும் சுவர்களாக மனிதர்களை மாற்றி அவர்கள் மேல் சுவரொட்டி களையும், பேனர்களையும் கட்டியும், தொங்கவிட்டும் பிரச்சாரத்தில் ஈடுபடும் உத்தியை திமுகவினர் தொடங்கி யிருந்தனர்.

புதிய உத்திகள்

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது முதல்வர் ஜெயலலிதா பாளையங் கோட்டையில் பிரச்சாரத்துக்கு வந்தபோதும் இதுபோன்றே கட்சி கரைவேட்டி, சேலை அணிந்த பெண்களையும் ஆண்களையும் விளம்பர சுவர்களாக மாற்றியிருந்தனர். இம்முறையும் அதேஉத்தியை அதிமுக மீண்டும் கையாளும் வாய்ப்புகள் அதிகம்.

இதுபோன்ற உத்திகளால் தேர்தல் ஆணையத்தின் கெடுபி டியிலிருந்து தப்பிக்கவும், அதே நேரத்தில் மக்களுக்கு தங்களது செய்திகள் சென்றடையவும் வழிஏற்படும் என்று கட்சிகள் கருதுகின்றன.

சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கும் போது மேலும் பல்வேறு புதிய உத்திகளுடன் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்க கட்சிகள் முன்வரக்கூடும்.

SCROLL FOR NEXT