தமிழகம்

கோவை- மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில்: 5 முறை இயக்கவும் கட்டணத்தைக் குறைக்கவும் கோரிக்கை

க.சக்திவேல்

கோவை- மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் நவம்பர் 1 முதல் துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ரயில் கட்டணத்தைக் குறைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை- மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் இயங்கும் பயணிகள் ரயில், பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் ரயில் நிலையங்களில் ஒரு நிமிடம் நின்று செல்வது வழக்கம். இதனால் தினந்தோறும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள், தொழிற்சாலைகளுக்குச் செல்லும் பணியாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் இந்தப் பயணிகள் ரயில் சேவையைப் பயன்படுத்தி வந்தனர். கடந்த 2020 மார்ச் முதல் கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக கோவை-மேட்டுப்பாளையம் பயணிகள் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது.

பின்னர் 2021 மார்ச் மாதம் முதல் சிறப்பு ரயில் சேவையாகப் பயணிகள் ரயில் இயக்கப்படுவதால், இடையில் காரமடை ரயில் நிலையத்தில் மட்டும் ரயில் நின்று சென்று வந்தது. எனவே, மீண்டும் துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையங்களில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ’’மேட்டுப்பாளையம்- கோவை-மேட்டுப்பாளையம் பயணிகள் சிறப்பு ரயில் (எண்கள்:06009,06010) கூடுதலாகத் துடியலூர், பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையங்களில் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் நின்று செல்லும். இதன்படி, காலை 8.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை புறப்படும் பயணிகள் ரயில் 8.40 மணிக்கு பெரியநாயக்கன்பாளையம், காலை 8.46 மணிக்கு துடியலூர் ரயில் நிலையங்களில் தலா ஒரு நிமிடம் நின்று செல்லும்.

இதேபோல, மாலை 5.55 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் புறப்படும் பயணிகள் ரயில், மாலை 6.08 மணிக்கு துடியலூர், மாலை 6.14 மணிக்கு பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையத்தில் தலா ஒரு நிமிடம் நின்று செல்லும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரயில் பயணிகள் கூறும்போது, "மேட்டுப்பாளையம்- கோவை இடையே பயணக் கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்பட்ட நிலையில், சிறப்பு ரயிலில் ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும், 5 முறை இயக்கப்பட்ட ரயில், தற்போது கோவை-மேட்டுப்பாளையம் இடையே ஒருமுறை மட்டுமே இயக்கப்படுகிறது.

தற்போது பெரியநாயக்கன்பாளையம், கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் மேம்பாலக் கட்டுமானப் பணிகளால், சாலைப் போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளது. எனவே, மீண்டும் பழைய நடைமுறையை அமல்படுத்தி ரயிலை 5 முறை இயக்கவும், பழைய கட்டணமாக ரூ.10 மட்டுமே வசூலிக்கவும் ரயில்வே நிர்வாகம் உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT