தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்துவதில் தமிழ்நாடு மாநிலம் சிறப்பாகச் செயல்படுவதால் நவம்பர் மாத ஒதுக்கீடாக 1.40 கோடி கோவிட் தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி:
’’தமிழக முதல்வரின் ஆலோசனையின்படி 7-வது கோவிட் மெகா தடுப்பூசி முகாம் மாநிலம் முழுவதும் சுமார் 50 ஆயிரம் இடங்களில் காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.
தற்பொழுது மூன்றாம் அலை கோவிட் நோய்த் தொற்றானது அமெரிக்கா, சீனா, ரஷ்யா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. எனவே அனைவரும் கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வரவேண்டும். அரசின் சார்பில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையிலேயே இதற்காகவே தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய அரசைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு மாநிலத்திற்குத் தேவையான கோவிட் தடுப்பூசிகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. மே, ஜூன், ஜூலை மாதங்களில் மட்டுமே தட்டுப்பாடு இருந்தது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாடுகளினாலும், முதல்வரின் கோரிக்கையினை ஏற்றும் மத்திய அரசு செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் கூடுதலாக கோவிட் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.
அதன்படி செப்டம்பர் மாதத்தில் 1.04 கோடி கோவிட் தடுப்பூசிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினால் மேலும் அந்த மாதத்தில் 43 லட்சம் கோவிட் தடுப்பூசிகளைக் கூடுதலாக வழங்கியது. இதேபோன்று அக்டோபர் மாதத்தில் 1.22 கோடி ஒதுக்கீடு செய்தது. அந்த கோவிட் தடுப்பூசிகளையும் நம்முடைய அரசு முழுமையாகப் பயன்படுத்தியதால் கூடுதலாக 3 லட்சம் தடுப்பூசிகள் அக்டோபர் மாதத்தில் வழங்கப்பட்டன.
செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் மத்திய அரசு ஒதுக்கிய தடுப்பூசிகளை முழுவதும் சிறப்பாகப் பயன்படுத்திச் செயல்பட்ட காரணத்திற்காகவும், முதல்வரின் கோரிக்கையை ஏற்றும் நவம்பர் மாதத்தில் 1.40 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது’’.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.