தமிழகம்

விருதுநகர் மாவட்டத்தில் அணைக்கட்டு பகுதிகளில் ஆட்சியர் ஆய்வு

இ.மணிகண்டன்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு பகுதிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டத்திலுள்ள பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு, இராஜபாளையம் வட்டம் சாஸ்தாகோவில் அணை ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதியில் வடகிழக்கு பருவ மழையையொட்டி மழை பெய்து வருவதால் நீர்வள ஆதாரத்துறையின் மூலம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைக்கட்டின் சுற்றுப்புறப்பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில் அணைகளின் நீர் இருப்பு, நீர்; வரத்து, மதகுகளின் உறுதி தன்மை, வரத்து கால்வாய்கள், கண்மாய்கள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இவ்வாய்வின் போது மாவட்ட ஆட்சியர் கூறுகையில், வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாத வண்ணம் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, பிளவக்கல், கோவிலாறு மற்றும் சாஸ்தாகோவில் ஆகிய அணைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகள், ஏரிகள், கண்மாய்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அணைகள் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு, நீர் வரத்து அதிகமாக இருந்தால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வண்ணம் கவனமான முறையில் உபரிநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டுள்ளது
மேலும், பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளிலிருந்து வரத்து கால்வாய்கள் மூலம் 40 கண்மாய்களுக்கு தண்ணீர் சென்றடைகிறது.

இதன் மூலம் சுமார் 8500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதிகள் பெறும். சாஸ்தா கோவில் அணைகளில் இருந்து வரத்து கால்வாய்கள் மூலம் 11 கண்மாய்களுக்கு தண்ணீர் சென்றடைகிறது.

இதன் மூலம் 3150 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதிகள் பெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் வத்திராயிருப்பு மற்றும் ராஜபாளையம் வட்டாரப்பகுதிகளில் தலா 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலங்களையும், வேளாண் இயந்திரங்கள் மூலம் நெல் நடவு செய்யப்பட்ட நிலங்களையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் நேரடி நெல் விதைக்கும் கருவி, நெல் விதைகள், நுண்ணூட்ட உரம், மரம் ஏறும் கருவி ஆகியவற்றை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி வழங்கினார்.

SCROLL FOR NEXT