தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர், நெல்லை, ராமநாதபுரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், விருதுநகரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
இதேபோல், கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,நாளை வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக வலு குறைந்து, அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் நோக்கி மெதுவாக நகரக்கூடும்.
இதன் காரணமாக 30-ம் தேதி தென்காசி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன முதல் மிக கனமழையும் மதுரை, விருதுநகர், சிவகங்கை, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும் ஏனைய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் கனமழையும் ஒருசில பகுதிகளில் இடி, மின்ன லுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.