வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக தலைமைதேர்தல் அதிகாரியிடம் அரசியல்கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வரும் நவ.1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி, நவ.1-ம் தேதி வரைவுவாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதுதவிர, நவம்பர் 13, 14, 27, 28 ஆகிய 4 நாட்கள் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகின்றன.
இந்த காலகட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம்உள்ளிட்ட பணிகளை மக்கள் மேற்கொள்ளலாம். அப்போது பெறப்படும் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, 2022 ஜன.5-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இந்நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பான அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையில் நேற்று நடந்தது. இதில், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., சட்டப் பிரிவு செயலாளர் கிரிராஜன், அதிமுக சார்பில் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைப்பு செயலாளர் மனோஜ் பாண்டியன், பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் துணைத் தலைவர் தாமோதரன், வழக்கறிஞர் நவாஸ்கான், தேமுதிக சார்பில் பார்த்தசாரதி, பாலாஜி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன், தென்சென்னை மாவட்ட தலைவர் ஏழுமலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில அலுவலக செயலாளர் ராஜசேகர், செயற்குழு உறுப்பினர் பத்ரி மற்றும் தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், மக்கள் தேசிய கட்சி என அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பின்னர்,அவர்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி ஜெயராமன் (அதிமுக): குடியிருப்பு பகுதிகளில் இருந்து வேறு இடத்துக்கு செல்லும் குடும்பத்தினர் குடும்ப அட்டை,ஆதார் அட்டை மாற்றும்போது வாக்காளர் அடையாள அட்டையையும் மாற்றித் தர வேண்டும்.
கரு.நாகராஜன் (பாஜக): அதிகாரிகளை வாக்குச்சாவடி முகவர்கள் தொடர்பு கொள்வதில் உள்ளபிரச்சினைகளை எடுத்துக் கூறியுள்ளோம். மொத்தமாக பட்டியலில் பெயர்களை நீக்குவது, சேர்ப்பது குறித்து தனியாக அதிகாரியை வைத்து பரிசோதிக்குமாறு கூறியுள்ளோம்.
தாமோதரன் (காங்கிரஸ்): 18 வயது பூர்த்தியடைந்த வாக்காளர்களை கல்லூரி, பள்ளிக்கே சென்று சேர்க்க வேண்டும். ஆதார்அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும். ஒரு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே வாக்குச்சாவடியில் வாக்களிக்க நடவடிக்கை எடுக்க கூறியுள்ளோம்.
வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): வாக்குச்சாவடிகள், சிறப்புமுகாம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பேரவையில் இடம்பெற்றுள்ள அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் ஆலோசனைகளையும் பெற வேண்டும். பணம்கொடுத்து, சாதி, மதத்தின் பெயரில்வாக்கு கேட்பதை தடுக்க வேண்டும்.
ராஜசேகர், பத்ரி (மார்க்சிஸ்ட்): பண்டிகை, பருவமழை காலம் என்பதால், வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் குறைபாடுகளை நீக்க வேண்டும்.
பார்த்தசாரதி (தேமுதிக): வாக்காளர் பட்டியல் குளறுபடிகளை போக்க வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
இவ்வாறு வலியுறுத்தியதாக அவர்கள் கூறினர்.