வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான உப்பு சீஸன் முடிவுக்கு வந்துள்ளது. நடப்பு ஆண்டில் 17 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். ஆண்டுக்கு 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது.
இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள் உப்பு உற்பத்தி உச்சத்தில் இருக்கும். அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு சீஸன் முடிவடையும். இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 10 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக குறித்த காலத்தில் உற்பத்தி தொடங்கவில்லை. மார்ச் 15-ம் தேதிக்கு பிறகே உப்பு உற்பத்தி தொடங்கியது.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி சீஸன் முடிவுக்கு வந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக உப்பளங்கள் அனைத்திலும் மழைநீர் தேங்கியுள்ளது. டிசம்பர் இறுதி வரை வடகிழக்கு பருவமழை இருக்கும் என்பதால் இந்தக் காலத்தில் உப்பு உற்பத்தி நடைபெறாது. உப்பளங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள உப்பு குவியல்களை பிளாஸ்டி ஷீட் மற்றும் தென்னங்கீற்றுகளால் மூடி பாதுகாப்பாக வைத்துள்ளனர்.