தமிழகம்

மறைந்த முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

செய்திப்பிரிவு

மதுரையில் மறைந்த மார்க்சிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ நன்மாறன்உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின்அஞ்சலி செலுத்தினார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்ததலைவரும், முன்னாள் எம்எல்ஏவும், ‘மேடை கலைவாணர்’ என்றழைக்கப்பட்ட என். நன்மாறன்(74) மதுரை பெத்தானியாபுரத்தில் உள்ள பாஸ்டீன் நகரில் வசித்து வந்தார். இவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் நேற்று முன்தினம் காலமானார்.

மகபூப்பாளையத்தில் உள்ள மாநகர மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கட்சிக் கொடி போர்த்திய அவரது உடல் பொதுமக்கள்,கட்சியினர் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.

இந்நிலையில் பசும்பொன் தேவர் குருபூஜை விழா உட்படபல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மதுரை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று பிற்பகல் நன்மாறன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பழனிவேல் தியாகராசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

முன்னதாக மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன், சு.வெங்கடேசன் எம்பி, இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ குணசேகரன் உட்பட அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து அவரது உடல் மகபூப்பாளையத்தில் இருந்து ஊர்வலமாக தத்தனேரிமயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு கம்யூனிஸ்ட் தொண்டர்களின் மரியாதை நடந்தது. பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT