தாம்பரம் ரயில் நிலையம் அருகே மகளைக் கொன்ற இளைஞருக்கு, அதிகபட்ச தண்டனை கிடைக்கும் வகையில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
சென்னை குரோம்பேட்டை பாரதிபுரத்தைச் சேர்ந்த மதியழகன் மகள் சுவேதா(20). தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ லேப் டெக்னீஷியன் இரண்டாமாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த செப். 23-ம் தேதி தாம்பரம் ரயில் நிலைய நுழைவாயிலில் நின்று கொண்டிருந்த சுவேதாவை, கார் தொழிற்சாலையில் பணிபுரியும் ராமச்சந்திரன் என்ற இளைஞர்கத்தியால் குத்தி கொலை செய்தார். மேலும், தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
அவரை மருத்துவனையில் சேர்த்த சேலையூர் போலீஸார், சிகிச்சைக்கு பின்னர் கைது செய்து,சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில், சுவேதாவின் தந்தை மதியழகன், டிஜிபி அலுவலகத்தில் நேற்று புகார் மனுஅளித்தார். அதில், "எனது மகளைக்கொன்ற ராமச்சந்திரனுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் வகையில் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த வழக்கை முறையாக விசாரணை செய்து, சரியான சாட்சிகளையும், ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்பித்து, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். எனது மகளின் கொடூர மரணத்துக்கு நீதிமன்றம் சரியான நீதி வழங்க, காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.