கலப்புத் திருமணம் செய்து கொண்ட தால் பாதிக்கப்பட்ட கவுசல்யாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ரூ.1 லட்சம் நிதியுதவி நேற்று வழங்கப்பட்டது.
உடுமலையில் கலப்புத் திருமணம் செய்துகொண்ட சங்கர் - கவுசல்யா தம்பதி மீது கடந்த 13-ம் தேதி கும்பல் தாக்கியதில் சங்கர் உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவமனையில் கவுசல்யா சிகிச்சை பெற்று வருகிறார்.
கவுசல்யா, என்ன படித்தாலும் அதற்கான முழுச் செலவையும் அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் ஏற்பதாக ஏற்கெனவே அறிவித்துள்ளது.
இந்நிலையில், மருத்துவமனை யில் கவுசல்யாவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் வன்னி யரசு தலைமையிலான நிர்வாகிகள் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது, சங்கரின் தந்தை வேலுச்சாமியும் உடன் இருந்தார்.
இவரது முன்னிலையில், கட்சியின் சார்பில் நிதியுதவியாக ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை, கவுசல்யாவிடம் வன்னியரசு அளித்தார்.
வெளியே வந்த அவர் செய்தியா ளர்களிடம் கூறும்போது, ‘‘தேர்தல் பணி சூழல் காரணமாக எங்களது தலைவரால், சிகிச்சையில் உள்ள கவுசல்யாவை தற்போது சந்திக்க முடியவில்லை. இருப்பினும், கவுசல்யா மருத்துவச் செலவுக்காக வும், ஏனைய தேவைகளுக்காகவும் ரூ.1 லட்சம் நிதியுதவியை கட்சி சார்பில் வழங்குமாறு தெரிவித்தார்.
கவுசல்யா படிக்க விருப்பம் தெரிவித்து உள்ளதால், அதற்கான படிப்புச் செலவையும் நாங்கள் ஏற்றுக்கொள்வதாக அவரிடம் உறுதி அளித்துள்ளோம். அவருக்கு தேவையான உதவியை கட்சி வழங்கும். இது போன்ற ஆணவக் கொலைகளால், வரும் காலங்களில் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க தனிச் சட்டத்தை அரசு இயற்ற வேண்டும்” என்றார்.
சரணடைந்தவர் நீதிமன்றத்தில் ஆஜர்
உடுமலையில் சங்கர் கொலை வழக்கில் திண்டுக்கல் மாவட்டம், பழநி கரிக்காரம்புதூர் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவரை போலீஸார் தேடி வந்தனர்.
அவர் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்ததை யடுத்து, மதுரையில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு, உடுமலை மாஜிஸ்திரேட் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை பொள்ளாச்சியில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளியில் 15 நாட்கள் அனுமதிக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.