வாணியம்பாடியில் மஜக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி டீல் இம்தியாஸ் உள்ளிட்ட இரண்டு பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் மஜக பிரமுகர் வசீம் அக்ரம் (42) என்பவர் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி இரவு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி.பாபு மேற்பார்வையில் 3 தனிப்படையினர் விசாரணை நடத்தினர். இதில், கொலை வழக்கில் தொடர்புடைய 12 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட டீல் இம்தியாஸ் சிவகாசி நீதிமன்றத்திலும், கூலிப்படை கும்பலை சேர்ந்த செல்வகுமார், அகஸ்டின், சத்தியசீலன், முனீஸ்வரன், அஜய், பிரவின்குமார் ஆகிய 6 பேர் தஞ்சாவூர் நீதிமன்றத்திலும், எழும்பூர் நீதிமன்றத்தில் ஒருவரும், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒருவரும் என மொத்தம் 9 பேர் சரணடைந்தனர். வசீம் அக்ரம் கொலை வழக்கில் தொடர்புடைய 21 பேரையும் காவல் துறையினர் வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி காளி முத்துவேல் முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மற்றும் சேலம் மத்திய சிறைகளில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் மீது ஏற்கெனவே அடிதடி, கொலை, கஞ்சா உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், டீல் இம்தியாஸ் மற்றும் அவரது கூட்டாளி பைசல் அஹ்மது ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் பரிந்துரை செய்துள்ளார்.
அதன்பேரில், டீல் இம்தியாஸ், பைசல் அஹ்மது உள்ளிட்ட இரண்டு பேரை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.