படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி. 
தமிழகம்

மதுரையில் தேவர் சிலைக்கு சசிகலா மரியாதை: ஜெயலலிதா பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திய வாகனத்தில் அதிமுக கொடிகட்டி வருகை

செய்திப்பிரிவு

மதுரை வந்த சசிகலா, கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தேவர் சிலைக்கு இன்று காலை 8.20 மணியளவில் மரியாதை செலுத்தினார்.

முன்னதாக மதுரை சங்கம் ஹோட்டலில் தங்கியிருந்த அவர் அமெரிக்கன் கல்லூரி வழியாக பயணப்பட முற்பட்டார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் அவர் மீனாட்சி கல்லூரி வழியாக கோரிப்பாளையம் வந்தடைந்தார். அவர் சிலைக்கு அருகில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். பிரம்மாண்ட சிலை என்பதால் மிகப் பெரியளவில் மாலை தயாரிக்கப்பட்டிருந்தது. அந்த மாலையை வேறொரு நபர் அணிவிக்க சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தொண்டர்களைப் பார்த்து கையசைத்துச் சென்றார்.

அதன்பின், தெப்பக்குளம் மருது பாண்டியர்கள் சிலைக்கும் மரியாதை செலுத்தினார். அதையடுத்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்குச் சென்றார்.

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா நேற்று (அக்.28) தொடங்கியது. இந்த விழாவில் கலந்து கொள்ள சசிகலா, தஞ்சாவூரில் இருந்து கார் மூலம் நேற்று மாலை 4.20 மணியளவில் மதுரை வந்தார். அவருக்கு மதுரையில் வழி நெடுக ஆதரவாளர்கள், தென் மாவட்ட அமமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மேளதாளம் முழங்க வரவேற்றனர்.

மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இரவு தங்கிய சசிகலாவை அமுமக நிர்வாகிகள், அதிருப்தி அதிமுக நிர்வாகிகள் பலர் சந்தித்துப் பேசினர்.

இந்நிலையில் இன்று காலை தேவர் சிலைக்கும், மருதுபாண்டியர்கள் சிலைக்கும் மரியாதை செலுத்துவிட்டு அவர் பசும்பொன் புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக ஹோட்டலில் இருந்து ஜெயலலிதா பிரசாரத்திற்கு பயன்படுத்திய வேனில் சசிகலா புறப்பட்டார். அந்த வேனில் அதிமுக கொடி கட்டப்பட்டு இருந்தது.

ஏற்கெனவே அதிமுக பொன்விழா நிகழ்ச்சியை ஒட்டி அவர் திறந்துவைத்த கல்வெட்டில் தன்னை அதிமுக பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டிருந்தது தொடர்பாக அதிமுக வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்நிலையில், இன்று ஜெயலலிதா பயன்படுத்திய பிரச்சார வாகனத்தில் அதிமுக கொடி கட்டி அவர் பயணப்பட்டது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

SCROLL FOR NEXT