சரக்கு கையாளுதல், வேளாண் மற்றும் சேவை ஏற்றுமதியை மேம்படுத்த மாநில அளவில் தலைமைச் செயலர் தலைமையில் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
2019-ம் ஆண்டு, மாநிலத்தின் அனைத்து சரக்குகளையும் கையாளுதல், வேளாண் மற்றும் சேவை ஏற்றுமதி தொடர்பானவற்றை கண்காணிக்கவும், வர்த்தகம் தொடர்பான விஷயங்களை ஆய்வு செய்யவும் தலைமைச் செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த செப்டம்பரில், தமிழ்நாடு ஏற்றுமதி வளர்ச்சிக் கொள்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து, மாநில ஏற்றுமதி வளர்ச்சிக் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தலைமைச் செயலர்வெ.இறையன்பு தலைமையில் தற்போது குழு அமைக்கப் பட்டுள்ளது. இந்தக் குழுவில் தொழில், நிதி, கால்நடை பராமரிப்பு, கைத்தறி, குறு, சிறு நடுத்தரதொழில்கள், வேளாண்மை ஆகியதுறைகளின் செயலர்கள் மற்றும் ஏற்றுமதி கவுன்சில் அல்லது ஏற்றுமதியாளர்கள் சங்க பிரதிநிதிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள். தமிழ்நாடு தொழில் வழிகாட்டி அமைப்பின் மேலாண் இயக்குநர் அமைப்பாளராகவும், அயல்நாடு வர்த்தக தென்மண்டல கூடுதல்இயக்குநர் ஜெனரல் துணைஅமைப்பாளராக செயல்படுவர்.
மேலும், இந்திய ஏற்றுமதி சங்கத்தின் தலைவர் ஏ.சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா சண்முகம், ஆட்டோமேட்டிவ் காம்போனன்ட் தயாரிப்பாளர்கள் சங்க மண்டல தலைவர் சுபகுமார், சிஐஐ தமிழ்நாடு துணைத் தலைவர் சத்யகம் ஆர்யா, மோகிப் ஷூ நிறுவன மேலாண் இயக்குநர் முகமது மொகிபுல்லா கொட்டாய், பாக்ஸ்கான் நிறுவன மேலாண் இயக்குநர் ஜோஷ் பவுல்கர், கேவிஎம் ஏற்றுமதி நிறுவன மேலாண் இயக்குநர் கே.வி.வி.மோகனன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக் குழுவானது குறைந்தபட்சம் 6 மாதத்துக்கு ஒருமுறை கூடி, ஏற்றுமதி கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள முன்னேற்றம்குறித்து விவாதிக்கும். தேவைப்பட்டால் வேறு துறைகளையும் இந்தஆய்வின்போது சேர்த்துக் கொள்ளஅனுமதிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி சார்ந்த துறைகளிடையே ஏற்றுமதி தொடர்பான சிக்கல்களை பரிமாறி அவற்றுக்கு இக்குழு தீர்வு காணும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.